கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல்

🕔 December 1, 2015
SAMSUNG CSC– அஷ்ரப் ஏ. சமத் –

கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும். சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மேற்படி மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை ‘கொழும்பு மேயா் ஹவுஸ்’ இல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே, சபாநாயகர் இதனைக் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேசப்பிரிய, கொழும்பு மாநகர மேயா் ஏ.ஜே.எம். முசம்மில் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

உலகின் பல நாடுகளையும் சோ்ந்த மேயா்கள் மற்றும் பிரநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவுள்ளதாக இதன்போது கரு ஜயசூரிய கூறினார்.

‘எதிா்கால நகரங்கள்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கு, சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை, இம்மாநாட்டில், மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி  அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்புரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதேவேளை, இலங்கை மத்திய வங்கி ஆளுநா் அர்ஜூன் மகேந்திரன் இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் சபாநாயகர் சொன்னார்.

கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் இங்கு கூறுகையில்;

“தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பழைமை வாய்ந்த மாநகர சபைகளின் ஒன்றான கொழும்பு மாநகர சபையானது, கொழும்பு மக்களுக்கு உயா்தர நவநாகரிக வசதிகளை வழங்குவதில் முன்னணியாக இருந்து வருகிறது.

கொழும்பு மாநகரசபையின் 150 ஆவது வருட நிறைவின் இறுதி நிகழ்வு, 14ஆம் திகதி கொழும்பு மாநகர வளாகத்தில் நடைபெறும்.

பல்லினங்களையும் பிரதிபலிக்கும் வண்ணமயமான கலாசார நிகழ்வாக இது அமையும். இக்காலாச்சார நிகழ்வின்போது மேயா்களாகவிருந்த முன்னாள் ஜனாதிபதிகள், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயா்கள் மற்றும் மதிப்புமிக்க அரச பதவிகளை வகிக்கும் மாநரக சபை அங்கத்தவா்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும், கொழும்பு மாநகரசபையின் 150 ஆண்டுகள்   நிறைவையொட்டி 500 ரூபா நாணயமும் இலங்கை மத்திய வங்கியினால் அன்றைய தினம்  வெளியிடப்படும்.

அத்துடன், நினைவு தபால்  முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு மேயரா்களாக பதவி வகித்த முன்னாள் பிரதமா், ஜனாதிபதி, அமைச்சா்கள், சபாநயாகா் மற்றும் அமைச்சா்களையும், அவர்களின் குடும்பங்களையும் அழைத்து, நினைவு விருது வழங்கப்படும்.  அல்லது மேயராக பதவி வகித்தவா்கள் உயிருடன் இருப்பின் அவா்களின் சேவைகை்காக  நினைவுச் சின்னம் வழங்கப்படும்.

கொழும்பு மேயராக 1937  ஆம் ஆண்டு தொடக்கம்,  24 பேர் மேயா்களாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களில் வாழ்பவா்கள் மற்றும் மறைந்தவர்கள் என, அனைவரும் கௌரவிக்கப்படவுள்ளனர்” என்றார்.
SAMSUNG CSC

Comments

புதிது பேஸ்புக் பக்கம்