குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல்

🕔 August 2, 2021

‘இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள – ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்’ என, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்;

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பணிபுரிந்து வந்த இசாலினியின் மரணம் தொடர்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருசிலர் பல்வேறுபட்ட ஊடகங்களில் சோடிக்கப்பட்ட, பொய்யான விடயங்களை பரப்பி, இந்த விடயத்தை, குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

டயகம பிரதேசத்தை சேர்ந்த தரகரொருவரினால் 2020 நவம்பர் 18ம் திகதி, இசாலினி என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவர் இந்த வீட்டிற்கு வந்த தினத்திலிருந்து ‘இசானி’ எனும் பெயரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த பெயரினாலேயே அனைவராலும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.

இவர் அங்கு வந்தபோது, அவருக்கு வயது 18 என்றே கூறியிருக்கிறார். எனினும், இவர் எரியுண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின் அவரது பிறந்த தினம் 2004.11.12 என உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில் இவர் பணிக்கு அழைத்துவரப்பட்டபோது, இவருக்கு வயது பதினாறு வருடங்களும் ஆறு நாட்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், ஒருசிலர் இன்றும் இவரை சிறுமியாக இனங்காட்டி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இஷாலினி வரும்போது, றிசாட் சிறையில்

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாஷாட் பதியுதீன் 2020.10.19ம் திகதியிலிருந்து, 2020.12.09ம் திகதி வரை கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு இஷாலினி வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் சிறைச்சாலையிலேயே இருந்திருக்கிறார். அதன்பின் 2021.04.24ம் திகதி அவர் மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இதுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் எரியூட்டியதும், இந்த விவகாரத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவரும் இவரே எனக்கூறி, இசாலினியின் மரணத்தை வைத்து ஒருசிலர் அரசியல் செய்கிறார்கள்.

இசாலினி பணிக்கு அமர்த்தப்பட்டதன் பின் அவரை பார்ப்பதற்கோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கோ அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இசாலினி தமது குடும்பத்தாரோடு தொடர்புகொள்வதற்கு கோரிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவருக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்பது நிமிடங்கள் வரை தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பாடல் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இசாலி தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த அறை 6X4 அடி அளவிலான கொட்டிலொன்றாக சித்தரிக்கப்பட்டு, அவரை சரியான முறையில் கவனிக்கவில்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இசாலினி தங்கியிருந்த அறை 7அடி 4 அங்குலம் நீளமும், 6 அடி 3 அங்குலம் அகலமும் கொண்டது. அங்கு அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் றிஷாட் பதியுதீன் மனைவியினால் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினரது மூத்த மகள் வெளிநாடு செல்வதற்கு முன் இசாலினிக்கு ஐயாயிரம் ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது இவர் இசாலினி மீது வைத்திருந்த அன்புக்கு தக்க சான்றாகும். இவர் இதுவரை தான் தங்கியிருந்த அறை தொடர்பில், எந்தவிதமான குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியதாக இல்லை.

அதேபோன்று இஷாலினியின் தாயாரும் – இஷாலினி தங்கியிருந்த அறை தொடர்பில் இதுவரை எந்தவிதமான கருத்தையும் வெளியிட்டதாக இல்லை. இதற்குப்பின் அவ்வாறானதொன்றை கூறுவதாக இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கான விடயமல்ல. ஏனெனில் அவர் ஏற்கனவே வழங்கிய கருத்துக்களுக்கும் தற்போது அவர் கூறுகின்ற விடயங்களுக்கும் பின்னால் அரசியல் கரமொன்று செயல்படுவது நன்றாக புலனாகிறது.

12 வயதிலிருந்து வல்லுறவு

இசாலினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் 2021.07.03ம் திகதி இடம்பெற்ற எரிகாய சம்பவத்தின் பின் 12 நாட்கள் இசாலினி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இந் நிலையில், விசக்கிருமி உட்சென்றதன் காரணமாக அவர் உயிரிழந்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின் இசாலினி 12 வயது தொடக்கம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர். அதாவது 2016ம் ஆண்டிலிருந்து இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இவர் தமது தந்தையின் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றதாக இசாலினியின் தாயார் கூறியிருந்தார். அங்கு தனது தந்தையின் சகோதரியொருவரும், அந்த சகோதரியின் புதல்வர்கள் இருவரும் இவரோடு அந்த வீட்டில் வசித்து வந்ததாக இசாலினியின் தாயார் பொலிசாரிடம் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு ஏதோவொரு காரணத்துக்காக இவரை 2017ம் ஆண்டு பாடசாலையிலிருந்து வெளியேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், பெரும்பாலான ஊடகங்கள் இது தொடர்பாக எதனையும் கூறாமலே இருந்துள்ளன.

இவ்வாறான நிலையில் நான்கு வருடங்கள் கழிந்ததன் பின், வேலைக்கு வந்து ஏழரை மாதகால குறுகிய காலப்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினரது வீட்டில் இவ்வாறான பாலியல் வல்லுறவு சம்பவம் நிகழ்ந்துள்ளமைக்கான எந்தவொரு சாட்சியங்களும் முன்வைக்கப்படாத நிலையில், ஊடகங்கள் தீர்மானமொன்றுக்கு வந்திருப்பது எவ்வாறு? என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுதிதியுள்ளது.

2020.11.18ம் திகதியிலிருந்து ஏழரை மாதகாலம் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அவர் பணியாற்றிய இடம், எப்போதும் நாடாளுமன்ற உறுப்பினரது மாமியார் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவியின் மிகுந்த கண்காணிப்பிலேயே இருந்து வந்திருக்கிறது. அத்தோடு, அவர் தங்கியிருந்த அறை கூட தேவைக்கேற்ப உள்ளே இருந்து பாதுகாப்பாக மூடிக்கொள்வதற்கு ஏற்றவாறு வசதி செய்யப்பட்டிருந்தது.

இவர் இங்கு பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கான எந்தவொரு பின்புலமும் இருக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் மரபணு பரிசோதனை மூலம் தகவல் வெளியாகி இருக்க வேண்டும். 

குற்றத்தை ஏற்குமாறு றிஷாட்டின் மைத்துனருக்கு சித்திரவதை

2021.07.03ம் திகதி இசாலினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் தமது குடும்பத்தாரோடு இந்த வீட்டுக்கு வந்திருக்கிறார். பலமாத காலங்களுக்குப் பின்னரே அவர் அங்கு வந்திருக்கிறார். இதன் உண்மைத் தன்மை தற்போது பொலிசாரின் பொறுப்பின் கீழுள்ள CCTV காட்சிகள் மூலம் தெளிவாகிறது.

எனினும், இசாலினிக்கு இவரால் ஏதேனும் கொடுமை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் பொலிசாரினால் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் பின் குற்றம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளுமாறு, பல்வேறு வகையான சித்திரவதைகளை மேற்கொண்டு பொலிசார் மிரட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் இவரது மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்பின் பல வருடங்களுக்கு முன், றிசாட் பதியுதீன் அவர்களது வீட்டில் பணியாற்றிய வேறொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலமொன்றின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினரது மனைவியின் சகோதரரினால் பாலியல் வல்லுறவு நடைபெற்றுள்ளதாக பதிவொன்றினை மேற்கொண்டு, அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, அவரை கைது செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஏற்கனவே பணியாற்றிய அந்த பெண் அங்கிருந்து சென்று பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இது தொடர்பில் எவரிடமும் எந்தவொரு முறைப்பாட்டையும் மேற்கொள்ளாத இவர், இந்த சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்தப் பெண், இசாலினி மரணிப்பதற்கு முன் இந்த வீட்டில் மீண்டும் பணியாளராக வருவதற்கு விருப்பத்தோடு இருந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, அவரது இந்த திடீர் மாற்றம் ஏதாவதொரு சதியொன்றின் அங்கமா? என சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை இதுவரை நிரூபிக்கப்படாதுள்ள நிலையில், அதனை நீதிமன்றமே தீர்மானிப்பதற்கு முன்னதாக, பொய்யான தகவல்களின் அடிப்படையில், பல்வேறுபட்ட தீர்மானங்களுக்கு வந்து, சிறிய அப்பாவி பிள்ளைகள் இருவர் இருக்கின்ற இவரது குடும்பத்தை அழித்தொழிக்காதீர்களென அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறோம்.

இசாலினிக்கு றிஷாட் பதியுதீன் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான எந்தவொரு சாட்சியும் இதுவரை கிடைக்கப் பெற்றதாக இல்லை. எனினும், ஊடகங்கள் மூலம் இசாலினிக்கு இந்த வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நற்பெயரை அழித்தொழிக்கும் சதித்திட்டத்தை அரங்கேற்றி வருவது நன்றாக புலப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்க காலம் தாழ்த்தப்பட்டதா?

2021.07.03ம் திகதி அதிகாலை 6.45 மணியளவில், இசாலினி தனது அறையிலிருந்து கூக்குரலிட்டவாறு, கீழ் மாடியிலிருந்த றிஷாட் பதியுதீனின் மாமனார் மற்றும் மாமியார் தங்கியிருந்த அறைப்பக்கமாக ஓடி வந்திருக்கிறார். அதனைக் கேட்ட மாமியார் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது ‘காப்பாற்றுங்கள்’ எனக் கத்தியவாறு, தனது அறைப்பக்கமாக ஓடி வருவதை கண்ணுற்றிருக்கிறார். அப்போது அவரது உடம்பில் தீ பற்றிக்கொண்டிருந்ததினால் பீதியடைந்த மாமியாரும் சத்தமிட்டு அழத்தொடங்கியிருக்கிறார். இந்த அழுகுரலைக் கேட்ட மாமனார், உடனடியாக வெளியே வந்திருக்கிறார். அவர் உடனடியாக செயல்பட்டு, பக்கத்திலிருந்த கார்பட்டொன்றை இசாலினியின் உடம்பின் மேல் போர்த்தி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இந்த விடயம் முதன்முதலாக இவ்வாறுதான் இடம்பெற்றிருக்கிறது. எனினும், இந்த தீ பரவல் இடம்பெற்றிருப்பது திடீர் விபத்தொன்றினாலா? அல்லது தற்கொலை முயற்சியா? என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்பட்டதாக இல்லை.

அதேவேளை, இசாலினியை காலம் தாழ்த்தியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. உண்மையில் இசாலினி காலை 7.20க்கு முன்னதாகவே அம்பியுலன்ஸ் ஒன்றின் மூலம் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். எனவே, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

அதேநேரம் இசாலினியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் போது பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் இசாலினியின் பெயர் மற்றும் வயதைச் சரியாக கண்டறியக் கிடைத்தது, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒருசில தினங்களுக்குப் பின்னராகும். அதுவரை, இவர் அந்த வீட்டில் ‘இசானி’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். இவர் அங்கு வேலைக்காக வரும்போது 18 வயதென்று கூறியிருந்ததனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் போது 18 வயதென்றே தகவல் வழங்கப்பட்டிருக்கிறது.

இஷாலினியின் தயார் கேட்டுப் பெற்ற பணம்

அத்தோடு இசாலினிக்கு இரண்டு இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இசாலினி 2020.11.18ம் திகதி வேலைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பின், ஐந்து நாட்களுக்குப் பிறகு இரண்டு மாத முற்பணமாக நாற்பதாயிரம் ரூபா (ரூபா 40,000) பணத்தை அவரது தாயார் பெற்றுள்ளார். அதன்பின் டிசம்பர் மாதம் அவரது தாயார் மீண்டும் தொடர்புகொண்டு, தமது வீட்டின் கூரை உடைந்துள்ளதாகவும் அதனை சீர்செய்வதற்கு அறுபதாயிரம் ரூபா (ரூபா 60,000) வரை தேவைப்படுவதாகவும் கூறி, அத்தொகையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

மீண்டும் ஒரு மாதம் கழித்து அவரது மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு, ஒரு மாதகாலமாக படுக்கையில் இருப்பதாகக் கூறி, மேலும் நாற்பதாயிரம் ரூபா (ரூபா 40,000) பணத்தை பெற்றிருக்கிறார். மேலும் இந்த பெண் எரிகாயத்துக்கு உள்ளாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும், இன்னொரு தொகைப் பணத்தை பெற்றுத் தருமாறு தரகரூடாக கோரியிருந்தார்.

இதனடிப்படையில், பணியாற்றியுள்ள ஏழரை மாத காலத்துக்கான மொத்த சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (ரூபா 150,000) ஆக இருந்த போதிலும், இவருக்கு மொத்த கொடுப்பனவாக இரண்டு லட்சம் ரூபா (ரூபா 200,000) வழங்கப்பட்டிருப்பது, இவரது குடும்ப ஏழ்மை நிலையை கருத்திற்கொண்டாகும்.

றிஷாட் வீட்டில் பணியாற்றியோர் இறந்த ‘கதை’கள்

இந்த வீட்டில் பணியாற்றிய மேலும் இருவர் இறந்துள்ளமை தொடர்பாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இசாலினி வேலைக்கு வருவதற்கு முன், இந்த வீட்டில் பணியாற்றி விலகிச் சென்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தமது காதலனோடு ஏற்பட்ட பிரச்சினையொன்றினால் புகையிரதத்திலிருந்து குதித்து அல்லது மோதி உயிரிழந்த சம்பவமொன்றை இதனோடு தொடர்புபடுத்தி, இந்த வீட்டில் பணிபுரிந்த காலகட்டத்தில் இடம்பெற்றதொன்றாக ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்குக் காட்டி, தப்பபிப்பிராயமொன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

அத்தோடு, மற்றுமொரு முப்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் இங்கு பணிபுரிந்து, விலகிச் சென்று ஒரு வருடத்திற்குப் பின், அவருக்கு தொற்றியிருந்த நோய் காரணமாக அவர் மரணித்திருக்கிறார். இவையனைத்தும் வேறொரு நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சதியென்பது தெளிவாக புலப்படுகிறது.

அதுமாத்திரமன்றி, இந்த வீட்டில் பணியாற்றிய பதினொரு பேர் சித்திரவதைக்குள்ளாகியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பில் 07ஆம் மாதம் 28ம் திகதி வரை எந்தவொரு வாக்குமூலமும் பெற்றிருக்கவில்லை. எனினும், அந்த பத்திரிகை 07ஆம் மாதம் 24ம் திகதியன்று ‘பதியுதீன் வீட்டில் 11 யுவதிகளுக்கு கடும் சித்திரவதை’ என போலிச் செய்தியொன்றினை, அவர்களது பத்திரிகையில் பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தனர். இதில் எவ்வித உண்மையுமில்லை என வீட்டார் கூறியிருந்தனர்.

மைத்துனர், மனைவி பற்றிய இட்டுக்கட்டல்கள்

அத்தோடு, இவையனைத்துக்கும் மேலாக றிஷாட் பதியுதீனுடைய மனைவியின் மற்றொரு சகோதரர், சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி 2007ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. றிஷாட் பதியுதீனுடைய மனைவியின் எந்தவொரு சகோதரரோ அல்லது உறவினரோ இவ்வாறு சிறையில் அடைக்கப்படவில்லை என்பதோடு, இது மிகப்பெரிய பொய்க் குற்றச்சாட்டொன்றாகும். இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டுக்களை பிரச்சாரம் செய்வது, அரசியல் மற்றும் இனவாத சதியொன்றென்பது தெளிவாக புலப்படுகிறது.

இது மாத்திரமன்றி றிசாட் பதியுதீனின் மனைவி 2008 முதல் டொலர் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ‘சிங்ஹ லே’ இயக்கத்தினர் 07ஆம் மாதம் 28ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இந்த பாரிய பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் குடும்பத்தார் கூறியிருந்தனர்.

இது ஒருசில இனவாத குழுக்களினால் றிஷாட் பதியுதீனுடைய அரசியல் பயணத்தை தடுப்பதற்கும், அவரது நற்பெயரை இல்லாதொழிப்பதற்குமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சதியொன்றாகுமெனவும்’ எனவும் மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Comments

புதிது பேஸ்புக் பக்கம்