காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு

🕔 July 31, 2021

– நூருல் ஹுதா உமர் –

முகம்மது நபியை இழிவாக எழுதிய பேஸ்புக் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பலபொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர் எம் ஐ முஹம்மத் றணூஸ், சமூக செயற்பாட்டாளர் ஐ.எல். அப்துல் மஜீத் ஆகியோர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர் அல்ஹாபிழ் சட்டத்தரணி கே.எல். சமீம் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளரும் சட்டத்தரணியுமான வை.எல்.எஸ். ஹமீட் இதனை மத நிந்தனை செய்கின்ற, இனங்களுக்கிடையே மத வெறுப்பை, பகைமையைத் தூண்டுகின்ற ஒரு செயல் எனக் கண்டித்துள்ளார்.

காரைதீவு தவிசாளர் மேற்படி செயற்பாடு தொடர்பில் தேசிய காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்; ‘காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலக முஸ்லிங்களின் தலைவராக, இறைத்தூதராக மட்டுமின்றி முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு மூலம், நாட்டின் சமாதானச் சீரழிவு ஏற்படவும், மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகுவதற்கான சந்தர்ப்பத்தையம் ஏற்படுத்துவதால் இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு பாதுகாப்பு தரப்பினரை வேண்டிக்கொள்கிறேன்’ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை, நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்துக்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்