சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

🕔 November 25, 2015

Gas cylinder - 0978– முன்ஸிப் –

பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்கின்றமை போல், சமையல் எரிவாயுவினையும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

எரிபொருள் விலைகளில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் எரிபொருட்களை விற்பனை செய்து வருவதைப் போல், சமையல் எரிவாயுவின் விலையிலும் சீராக்கல் நடைமுறையொன்றினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமையல் எரிவாயுக்கான விலையினை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் குறைத்துள்ள போதும், அம்பாறை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 1346 ரூபாய் என அரசாங்கம் நிர்ணயித்திருந்தது. ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் அதேயளவு எரிவாயு 1459 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கு அரசாங்கம் நிர்ணயித்த விலையிலும் பார்க்க 113 ரூபாவினை அம்பாறை மாவட்ட மக்கள் அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

இதேபோன்று, கொழும்பு தவிர்ந்த அனைத்து மாவட்ட மக்களும், வௌ;வேறு தொகைகளில், அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 1558 எனும் அதிக விலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு விற்கப்படுவதாக அறிய முடிகிறது.

இது குறித்து வியாபாரிகளிடம் விசாரித்தபோது, ‘போக்குவரத்துக்கான கட்டணமாகவே, மேலதிக தொகை அறவிடப்படுவதாகக்’ கூறுகின்றனர்.

‘12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கு அரசாங்கம் 1346 ரூபாவினை நிர்ணயித்துள்ளபோதும், அதனை கொழும்பிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ஏற்படுகிறது. அந்தவகையில், போக்குவரத்துச் செலவினை எரிவாயு விலையுடன் சேர்த்து, அதனை விற்பனை செய்யும் கம்பனிகள் அறவிடுவதாகவும்’ வியாபாரிகள் விபரிக்கின்றனர்.

இதேபோன்றுதான் கடந்த காலங்களில் பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கான விலையுடன், அதனை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவீனத்தையும் சேர்த்து, நுகர்வோரிடம் அறவிடப்பட்டு வந்தது. ஆயினும், தற்போது – விலைச் சீராக்கம் ஒன்றினூடாக, இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை ஒரே விலையில் விற்பனை செய்யும் நடைமுறையொன்றினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, சமையல் எரிவாயுவின் விலையில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்