காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஹமாஸின் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக அறிவிப்பு
பலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை முதல் காஸா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமையன்று காஸா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதனால் வயல் வெளிகள் உட்பட பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேல் கூறுகிறது.
மேலும், காஸாவிலிருந்து நடத்தப்படும் அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் புதிய சண்டைகளையும் எதிர்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளத.
கடந்த மே 21ஆம் திகதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாகும் இது.
இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையில் நடைபெற்று வந்த 11 நாள் சண்டை கடந்த மாதம் 21ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
இந்த நிலையிலேயே தற்போது புதிதாக தாக்குதல் ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலில் 12 வருடங்களாக பிரதமர் பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாஹுவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதிவியேற்று சில நாட்களில், இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.