தலைப்புச் செய்திகள்

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி நபர்களை நேற்று கைது செய்தனர்.

26 மற்றும் 27 வயதுடைய சிலாபம் மற்றும் மதுரங்குளிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சேவையாற்றி வந்த மதரஸாவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் வருகை தந்து மாணவர்களுக்கு போதனையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், குறித்த ஆசிரியர்கள் இருவரும் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது