சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம்

🕔 March 19, 2021

ன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுவோருக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் சிறுபான்மை சமூகங்களை இலக்குவைக்கும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்;

‘ஒருவரை விசாரணைகளின்றி இரு வருடகாலத்துக்கு தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வழிகாட்டல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். இந்த வழிகாட்டல்கள் குறிப்பாக இன, மத அடிப்படையிலான சிறுபான்மை சமூகத்தை இலக்குவைப்பவையாக அமைந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்டு கடந்த 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இன, மதரீதியான அடிப்படைவாத சிந்தனைகளைப் பரப்புதல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டமைக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துவது தொடர்பில் பின்பற்றப்படக்கூடிய வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராயப்படவில்லை என்பதுடன் நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியினாலேயே தன்னிச்சையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன, மத ரீதியில் சமூகங்களுக்கிடையில் வன்முறைகளைத் தூண்டுதல், அமைதியின்மையை ஏற்படுத்தல், அடிப்படைவாத சிந்தனைகளை விதைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோரை விசாரணைகளின்றி இரு வருடங்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்களில் தடுத்துவைத்து புனர்வாழ்வளிக்க முடியும்.

அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 06ஆவது சரத்தின் பிரகாரம் ஒவ்வொரு பிரஜையினதும் சுதந்திரத்தை உறுதிசெய்வது தொடர்பில் இலங்கை சில உத்தரவாதங்களை வழங்கியிருக்கிறது. எனினும் அந்த உத்தரவாதங்கள் தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் பின்பற்றப்படவில்லை.

சிறுபான்மை சமூகத்தை இலகுவாகத் துன்புறுத்தும் விதமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கூறுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வலுப்படுத்தி (தூண்டுதல் அளித்தல்) வருகின்றது.

சிறுபான்மை சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு அல்லது வன்முறையைத் தூண்டுவோருக்கு எதிராக உரிய அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’ என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்