உப்பை அதிகம் உட்கொள்ளும் இலங்கை மக்கள்: மரணத்தை ஏற்படுத்தும் பழக்கம் என தெரிவிப்பு

🕔 March 9, 2021

லங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 09 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை உட்கொள்கின்றனர் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

ஒருவர் நாளொக்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 05 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையிலேயே, இவ்வாறு அதிகளவு உப்பை இலங்கை மக்கள் உட்கொள்கின்றனர்.

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று தொடக்கம் மார்ச் 14ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் உப்பு பாவனை தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34 வீதமானவை இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன.

அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன.

இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், அதிகமாக உணவில் உப்பை பயன் பயன்படுத்துவதாகும்.

ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்றனர்.

விசேடமாக உப்பு பாவனையைக் குறைப்பதனால், ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments