முக்காடு போட்ட சிறுமியும், கொழுத்திப் போட விரும்பும் கேள்விகளும்

🕔 January 26, 2021

– மரைக்கார் –

சுக்ரா முனவ்வர் என்கிற சிறுமி, சிங்கள மொழி தனியார் தொலைக்காட்சியில் நடந்த போட்டி நிகழ்வொன்றில் பங்கேற்று 20 லட்சம் ரூபாவை வென்றுள்ளார். இதனையடுத்து இந்த சிறுமியைப் பற்றி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதோடு, வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளன.

இலங்கை சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்கு குறைந்த ஆள் எவரும் முதிர்ச்சியடையாத வயதைக் கொண்டோராகவே (மைனர்) கருதப்படுவர். தற்போது சுக்ரா எனும் மாணவிக்கு 17 வயதாகிறது. அந்த வகையில் சுக்ரா ஒரு சிறுமி.

குறிப்பிட்ட நிகழ்ச்சியில் சுக்ரா எனும் மாணவி தனது அறிவாற்றலை வெளிப்படுத்தி 20 லட்சம் ரூபாவை வென்றுள்ளதால், அவரை ஊடகங்கள் அழைத்து பேட்டிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

மேற்படி மாணவி சிங்கள மொழியில் படித்தவர், சிங்கள மொழியை மிகச் சிறப்பாக பேசுகிறார். அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சியும் சிங்கள அலைவரிசை. அதனால் சுக்ராவை அவர் பங்கேற்ற சிங்கள தொலைக்காட்சி உட்பட, சில சிங்கள ஊடகங்களும் அழைத்துப் பேட்டிகளை எடுத்துள்ளன.

கதை இங்கேதான் சிக்கலாகிறது. சுக்ராவை பேட்டி காணும் சிங்கள ஊடகங்களில் கணிசமானவை – உணர்வுபூர்வமான, சர்ச்சைக்குரிய பல விடயங்களை சுக்ராவிடம் கேள்விகளாகத் தொடுக்கின்றன.

மதவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசப்பற்று போன்ற – இலங்கையில் இப்போதைக்கு ‘அபாயகரமானவை’யாகப் பார்க்கப்படும் சொற்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான கேள்விகள் சுக்ராவிடம் எழுப்பப்படுகின்றன.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதென்பது ‘கத்திமேல் நடப்பதற்கு’ ஒப்பானதாகும்.

‘முஸ்லிம் பெண்’ என்கிற அடையாளத்துடன் முக்காடு போட்ட – சுக்ரா என்கிற சிறுமி, மேற்படி அபாயகரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, கொஞ்சம் பிசகினாலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தவறான பதிலாக – சுக்ராவின் விடைகள், பேரினவாதிகளால் பார்க்கப்படும்.

சிங்கள பேரினவாதம் எதிர்பார்க்கும் விடைகளைத்தான் சுக்ரா என்கிற சிறுமியிடம், சில சிங்கள ஊடகங்கள் எதிர்பார்ப்பதை – அவற்றின் கேள்விகளினூடாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லது, சுக்ராவின் பதில்களை வைத்து, மேற்படி சிங்கள ஊடகங்கள் எதையாவது கொழுத்திப் போட ஆசைப்படுகின்றனவா என்கிற சந்தேகங்களும் உள்ளன.

சுக்ரா என்கிற சிறுமியின் பதில்கள் சிங்களப் பேரினவாதத்துக்குப் பிடித்துப் போயுள்ளது என்பதை, பேட்டி எடுப்பவர்களின் முகமலர்ச்சியினூடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, தனித்துவம், கலாசார அடையாளங்களைப் பேணுதல் மற்றும் அடிப்படைவாதம் என்கிற சொல்லினூடாக பேரினவாதத்தால் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுதல் போன்ற ஆழமான விடயங்களை சுக்ரா பேசவில்லை. ஒரு சிறுமியிடம் அந்தளவு விடயதானங்களை நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

கேள்வி – பதில் நிகழ்ச்சியொன்றில் வெற்றிபெற்ற முஸ்லிம் சிறுமி ஒருவரை பேட்டி காண அழைத்து வந்து, அவரிடம் அடிப்படைவாதம், மதவாதம், பெண் உரிமை குறித்தெல்லாம் பேசுவது அபத்தமாகும்.

மேற்படி விடயங்களில் சுக்ராவின் பதில்கள் முதிர்ச்சியாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்விடயங்களில் முதிர்ச்சியான பதில்களை வழங்குவதற்குரிய வயதும் தேடலுக்கான காலமும்- சுக்ராவுக்கு இன்னும் இருக்கிறது என்பதுதான் யதார்த்தமாகும்.

Comments