சனி – வியாழன் கோள்கள் அருகருகே: மேற்கு வானில் இன்று காணலாம்

🕔 December 21, 2020

னி – வியாழன் கோள்கள் இரண்டும் நம் பார்வைக் கோணத்தில் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று டிசம்பர் 21ஆம் திகதி நிகழவுள்ளது.

நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) இன்று நடைபெறும்.

சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சரியாக சொல்ல வேண்டுமானால் 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன. அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) 0.1 டிகிரியாக இருந்துள்ளது.

இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், இன்று 21ஆம் திகதி அமையவுள்ளது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது இப்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவாகும்.

இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்துக்கு முன்பாகவே சூரியன் மறைந்த சில நிமிடங்களில் வானில் மேற்கு திசையில், இந்த இரண்டு கோள்களையும் பிரகாசமான புள்ளியாக காணமுடியும்.

ஆனால் அந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் திகதியான இன்று, புள்ளி ஒரு டிகிரியாக மாறும்.

இன்று இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும். சூரியன் மறைந்த பிறகு இதை வெறும் கண்களால் காணலாம்.

ஆனால் உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.

நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலிருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரை விட அதிகம்.

செய்தி மூலம்: பிசிசி தமிழ்

Comments