மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி

🕔 November 29, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி எழுந்துள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் உட்பட 04 பேர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மலேசியாவில் கொரேனா தொற்றுக்குப் பலியாகினர். அம்முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் மலேசியாவில் பலியான 352வது நபர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 84 வயது முதியவரும், 60 வயதான இரு ஆடவர்களும் உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நான்காவது நபரான தாலிப் ஒமர் என்பவரது வயது 130 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வயது தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், சில ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன.

இது சரியான தகவல் எனில் மலேசியாவில் கோவிட்-19 தாக்கியதால் உயிரிழந்த முதியவர் தாலிப் ஒமர், உலகின் மிக வயதான நபராக கருதப்படுவார் என மலேசிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

இதற்கிடையே தாலிப் ஒமர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர் மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தாலிப் ஒமரின் வயது தொடர்பாக ஊடகங்கள் தெளிவுபடுத்தக் கோரியபோது, மலேசிய சுகாதார அமைச்சு தமது ட்விட்டர் கணக்கின்வழி விளக்கமளித்துள்ளது.

“உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த தகவல்களின்படியும், உள்ளூர் பொலிஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இறந்தவரின் வயது 130 எனத் தெரியவந்தது. இதைப் பரிசீலித்த பின்பே அமைச்சின் அறிக்கையில் விவரங்கள் இடம்பெற்றன,” என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இறந்த முதியவரிடம் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாலிப் ஒமரின் வயது 130 தான் என்றும், அவரிடம் உள்ள ஆவணத்தின் மூலம் தமக்கு இந்த விவரம் தெரியவந்ததாகவும் அவரது மகள் கிம்ரி தாலிப் கூறுகிறார்.

தாம் வேறு நகரத்தில் வேலை பார்த்து வருவதால் தந்தையின் அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும், இறக்கும்வரை தாலிப் ஒமர் உறவினர்களுடன் தங்கி இருந்ததாகவும் கிம்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், தாலிப் ஒமர் இறக்கும் வரை எந்தவிதமான உடல் உபாதைகளும் நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்தார் எனவும் கூறியுள்ளார்.

Comments