நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள்

🕔 November 18, 2020

டுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்து உரையாற்றினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் வழமைக்கு மாற்றமாக பல விடயங்கள் நடந்தன.

வரவு – செலவு திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இடைநடுவில் 10 நிமிடம் இடைவேளை கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து சபாநாயகர் 30 நிமிடம் இடைவேளை வழங்கியதை அடுத்து, அந்த நேரம் தேநீர் இடைவேளையானது.

இதேவேளை வரவு – செலவு திட்ட வாசிப்பை, ஆசனத்தில் அமர்ந்தவாறு பிரதமர் மஹிந்த சற்று நேரம் நிகழ்த்தினார். களைப்பு காரணமாகவே அவர் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது – நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மாற்றமான நடவடிக்கையாகும்.

அதேவேளை, நாடாளுமன்றின் உள்ளே செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று அச்சம் காரணமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

இரண்டரை மணி நேரம் நீடித்த நேற்றைய வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையில் சமர்ப்பிக்கப்பட்ட 75ஆவது வரவு – செலவுத் திட்டமாகும்.

மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த 11ஆவது வரவு – செலவுத் திட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிக வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தவர்களில் இரண்டாமவர் எனும் பெருமையும் மஹிந்தவுக்கு கிடைத்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று புதன்கிழமை நடைபெறுகிறது.

Comments