காது அழுக்கை வைத்து, மன அழுத்த அளவை மதிப்பிடலாம்: ஆராய்ச்சியாளர் தெரிவிப்பு

🕔 November 6, 2020

காது அழுக்கை வைத்து உங்கள் மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் (Cortisol) அதிகரித்து வருவதை, செவித் துவாரங்களைச் சுற்றி, எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் வளைவு நெளிவான பகுதிகளில் அளவிடலாம். 37 பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது.

இது, மன அழுத்தம் போன்ற, மன நலம் சார்ந்த நிலைகளை, இன்னும் சிறப்பாக கண்டறிய, இன்னும் பல கதவுகளை திறக்க உதவும் என மருத்துவர் ஆண்ட்ரேஸ் ஹெரனெ-விவெஸ் சொல்கிறார்.

இதற்காக இவர் புதிய காது குடையும் ஸ்வாபையும் கண்டு பிடித்து இருக்கிறார். இந்த ஸ்வாப், செவிப்பறையை சேதப்படுத்தாது.

கார்டிசாலை போராட அல்லது தப்பிச்செல்லத் தூண்டும் ஹார்மோன் என்கிறார்கள்.

எப்போது எல்லாம் கார்டிசால், மன அழுத்தத்தின் எதிர்வினையாக, மூளைக்கு எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்துகிறதோ, அப்போது எல்லாம் நோய் எதிர்பு மண்டலம் தொடங்கி, செரிமாண மண்டலம் மற்றும் தூக்கம் வரை, கிட்டத்தட்ட உடலில் உள்ள எல்லா அமைப்புகளின் மீதும் தாக்கம் செலுத்தும்.

ஆனால், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு போன்ற கோளாறுகளில், கார்டிசாலின் பங்கு குறித்து, இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆண்ட்ரேஸ் ஹெரனெ-விவெஸ், பல்கலைக்கழக கல்லூரி லண்டன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காக்னிட்டிவ் நியூரோ சையின்ஸ்-ல் ஒரு மன நல மருத்துவர். இவர் கார்டிசால் ஹார்மோன்கள் அதிகரிப்பதும் குறைவதும் எதை சுட்டிக் காட்டுகிறது என புரிந்து கொள்ள விரும்புகிறார்.

இது ஆரம்ப நிலைதான், ஆனால் இந்த ஆராய்ச்சி, மனநலம் சார்ந்த நிலைகளுக்கு புறவய உயிரி அளவுகோள்களை உருவாக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் ஆண்ட்ரேஸ்.

கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கும் போது, மன நலன் சார்ந்த பிரச்சனை அறிகுறி இருப்பவர்கள், தங்களின் கார்டிசால் அளவை பரிசோதித்துக் கொள்ளலாம்.

தற்போது, மன நலம் சார்ந்த பரிசோதனைகள், பெரிதும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதாக இருக்கின்றன. எனவே, இந்த சோதனை மன நலம் சார்ந்த விஷயங்களை நிபுணர்கள் இன்னும் துல்லியமாக கணிக்க உதவும்.

ஒரு நல்ல பரிசோதனை மட்டும் தான், சரியான மருத்துவ சிகிச்சைக்கான பாதையாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரேஸ்.

மன அழுத்த சிகிச்சை மருந்து மாத்திரைகளால், யார் பலனடையலாம் அல்லது யார் பலனடைய முடியாது என்பதைத் தெரிவிக்க இது பயன்படுத்தப்படலாம்.

கார்டிசால் அளவை ரத்தத்தில் அளவிடலாம். ஆனால், அந்த நேரத்தில், அவர்கள் ரத்தத்தில் எவ்வளவு கார்டிசால் இருக்கிறது என்றுதான் அளவிட முடியும்.

இவர் முன்பே, கார்டிசால் அளவை மயிர் புடைப்பில் (மயிர்களின் வேர்ப்பகுதி) இருந்து அளவிட முடியுமா என ஆராய்ச்சி செய்தார். மயிர் புடைப்பில் இருந்து கார்டிசலை அளவிட 3 சென்டி மீட்டர் நீளம் உள்ள மயிர் வேண்டும். இத்தனை நீள மயிர் எல்லோருக்கும் இருக்காது அல்லது இந்த மயிரை இழக்க விரும்பமாட்டார்கள். ஆனால் காது மெழுகில் கார்டிசால்கள் மிகவும் நிலையாக இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் ஆண்ட்ரேஸ்.

தேனீக்களும் மனிதர்கள் காதில் இருக்கும் மெழுகு போன்ற ஒன்றை உருவாக்கும் உயிரினம்தான். எனவே, தேனீக்களுடன் சில ஒற்றுமைகளைச் சொல்கிறார். தேனீக்கள், சர்க்கரையை, அந்த மெழுகு போன்ற தேன் கூட்டில், அறை வெப்ப நிலையில்தான் பாதுகாத்து வைக்கின்றன.

எனவே ஹார்மோன்கள் மற்றும் மற்ற பொருட்கள், காது மெழுகில் காலப் போக்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. மயிரில் இருந்து எடுக்கப்பட்ட கார்டிசால்களை விட, காது அழுக்கில் இருந்து அதிக கார்டிசால்கள் எடுக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

நீண்ட காலத்தில், இந்த முறையை மேம்படுத்தி குளுகோஸ் அளவை கண்டறியலாம். அவ்வளவு ஏன், இவற்றில் இருந்து வைரஸ்களுக்கு எதிரான ஆண்டி பாடிகள் எனப்படும் எதிர்ப்பான்களைக்கூட கண்டுபிடிக்கலாம்.

Comments