20ஆவது திருத்தினுள் தந்திரமான முறையில் சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 November 5, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தினுள் மிகவும் தந்திரமாக சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் அலி சப்றிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொது மக்களிடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ முழுமையான கலந்துரையாடல்களை நடத்தாது, குழு நிலை விவாதத்தின் குழப்பத்துக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் தொடர்பான சரத்து ஒன்றே தந்திரமாக உட்புகுத்தப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கல்யானந்த திரனாகம; 19ஆவது திருத்தச் சட்டம் கூடாது என்றும், அதனை நீக்க வேண்டும் என்றும் கூறி, அதில் அடங்கி இருந்த மிக மோசமான ஷரத்தை 20ஆவது திருத்தச் சட்டத்திற்குள் உள்ளடக்கியமை ஒழுக்கக்கேடான செயல் என கூறியுள்ளார்.

“விவாதங்களை நடத்தவில்லை, அமைச்சரவையின் எண்ணிக்கை குறைப்பது தொடர்பான rரத்தை மாத்திரமே உள்ளடக்க வேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடு மாத்திரமே இருந்தது.

இதனுடன் சேர்த்து தேசிய அரசாங்கம் தொடர்பான சரத்தையும் ரகசியமான முறையில் உள்ளடக்கியுள்ளனர்.

இது தவறானது, இவ்வாறு செய்த விதம் மோசமானது, அந்த கொள்கையும் தவறானது.

மத அடிப்படைவாதிகளை அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சுப் பதவிகளை வழங்கப் போகிறார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments