தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைக்க தீர்மானம்

🕔 November 3, 2020

யன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக புகையிரதத் திணைக்களத்தின் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களை வனசீவராசிகள் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்காக வனசீவராசிகள், வனப்பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது.

இலங்கையில் 19 மாவட்டங்களிலுள்ள 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது யானை – மனித பிரச்சினை காணப்படுகின்றது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பின்பற்றுகின்ற பல்வேறு மூலோபாயங்களில் பாதுகாப்பு வேலி அமைத்தல், மின்வேலி அமைத்தல் என்பன முக்கியமான அமைகின்றது.

இதுவரை 4500 கிலோமீற்றர்களுக்கு மேற்படி 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 1500 கிலோமீற்றர்கள் மின்வேலிகளும், பாதுகாப்பு வேலியுடன் கூடிய யானைப் பாதுகாவல் மத்திய நிலையமும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வேலிகளை அமைப்பதற்காக மரத்தூண்கள் பயன்படுத்தப்பட்டாலும், காட்டு யானைகள் அவற்றை பிரட்டி விடுவதுடன், அதற்காக கொங்கிரீட் தூண்கள் அமைப்பதிலும் சிரமங்கள் பலவுள்ளதால் அவையும் சாத்தியமில்லை.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கான மாற்று வழிமுறையாக பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக புகையிரதத் திணைக்களத்தின் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களை வனசீவராசிகள் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments