20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

🕔 October 13, 2020

ரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் மீறப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் ரீதியான தாக்குதல்களை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுக்க தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தொடர்ந்தும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து நிர்மாணிக்கப்பட்ட தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த வெளியிட்டுள்ள அமைச்சரவை பத்திரம், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் 94 அதிரடிப்படையினர் மற்றும் 46 பொலிஸாரை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை என்பன முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

20வது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

எனினும் அரசாங்கதுக்கு 149 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். இவர்களில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments