ஒரு மகனுக்கு உரிமை கோரும் இரு பெண்கள்: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

🕔 October 5, 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

கன் ஒருவருக்கு இரண்டு தாய்மார் உரிமை கோரும் வழக்கை இன்று திங்கட்கிழமை விசாரித்த அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை நீதிமன்றம், உண்மையைக் கண்டறிய இரு தரப்பினரின் மரபணு பரிசோதனையை (டி.என்.ஏ) மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஐந்து வயதில் காணாமல் போன தன்னுடைய மகன், கடந்த வாரம் 21 வயது இளைஞனாக தனது வீட்டுக்கு வந்துள்ளார் என, அம்பாறை மாவட்டம் – மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா என்பவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததோடு, கிராமசேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, குறித்த பையனுக்கு தான்தான் தாய் என்றும், தனது மகன் பிறந்ததில் இருந்து தன்னுடனேயே வளர்ந்து வருவதாகவும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான் என்பவரும் உரிமை கோரினார். மட்டுமன்றி, தனது மகனை ஹமாலியா என்பவரிடமிருந்து மீட்டுத் தருமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு ஒன்றினையும் அவர் பதிவு செய்திருந்தார்.

நூநுல் இன்ஷான்

இதற்கிணங்க சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் இவ்விடயம் தொடர்பில் வழக்கு ஒன்றினை பொலிஸார் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று திங்கட்கிழமை நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சர்ச்சைக்குரிய மகனை உரிமை கோரும் தாய்மார்களான ஹமாலியா மற்றும் நூறுல் இன்ஷான் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். சர்சைக்குரிய மகன் – இதுவரையில் தன்னை வளர்த்து வந்த தாய் – நூறுல் இன்ஷான் என்பவருடன் இணைந்து நீதிமன்றில் முன்னிலையானார்.

குறித்த மகனுக்கு அக்ரம் றிஸ்கான் என – தான் பெயர் வைத்ததாக ஹமாலியா கூறும் அதேவேளை, தனது மகனின் பெயர் முகம்மட் சியாம் என்கிறார் நூறுல் இன்ஷான்.

ஹமாலியா சார்பில் மூன்று சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த போதும், நூறுல் இன்ஷான் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை

குறித்த பையன் தமது மகன் என தெரிவித்த இரண்டு தாய்மாரும், அதனை நிரூபிக்கும் பொருட்டு, சில ஆவணங்களையும் மன்றில் ஒப்படைத்தனர்.

சுனாமியின் போது மகனைத் தொலைத்த தாய் ஹமாலியா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்; “இந்த வழக்கு முடியும் வரையில் வாரத்தில் மூன்று நாட்கள் ஹமாலியாவுடன் சர்ச்சைக்குரிய மகன் தங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

நாளை மறுதினம் ஆஜராக உத்தரவு

இரண்டு பக்க வாதங்களையும் செவிமடுத்த நீதவான்; குறித்த பையன் யாருடைய மகன் என்பதைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தார். எனவே, இரண்டு தாய்மார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மகன் ஆகியோருடன், இரண்டு தாய்மாரின் கணவர்களையும் புதன்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி இரண்டு தாய்மாரின் கணவர்களும் அவர்களிடமிருந்து சட்டப்படி பிரிந்து வாழ்வதாக இதன்போது மன்றில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும், நூறுல் இன்ஷானின் முன்னாள் கணவர் அமீர் என்பவர் இன்றைய தினம் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டமையை அடுத்து, நீதிமன்றுக்கு தான் வருகை தந்தாக அவர் தெரிவித்தார்.

ஹமாலியா

எது எவ்வாறாயினும், மரபணு பரிசோதனையில் உண்மையான தாய் யார் என தெரியவந்தாலும் கூட, குறித்த மகன் 18 வயதுக்கு மேற்பட்டவர் (மேஜர்) என்பதால், எந்தத் தாயுடன் வாழ்வது என்கிற முடிவை எடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட மகனுக்கே உள்ளது எனவும் இதன்போது நீதவான் சுட்டிக்காட்டினார்.

வழக்கு விசாரணையின் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய தார்மார் இருவரும், இந்த விடயத்தில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதேவேளை, குறித்த பையன் நூறுல் இன்ஷானுக்குப் பிறந்தவர் என்றும், அவரின் தந்தை தான்தான் எனவும் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த அமீர் என்பவர் பிபிசியிடம் கூறினார்.

நன்றி: பிபிசி தமிழ்

தொடர்பான செய்தி: அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை

Comments