கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

🕔 September 7, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் ‘கொரோனா நெகடிவ்’ என வந்துள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா பொசிசிடிவா, நெகட்டிவா என்பதைவிட, நுரையீரலின் தொற்று ஆறி, மேம்படுவதுதான் முக்கியம். நுரையீரல் மேம்பட்டும் வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய ‘ஐ பேட்’ இல் நிறைய கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகள் போன்றவற்றை பார்த்து வருவதாகவும், ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி என்றும் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார்.

வார இறுதியில் எஸ்.பி.பியின் திருமண நாளைக் கொண்டாடியதாகவும் எழுதுவதன் மூலம் அவர் கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் திட்டமிட்டபடி உடற்பயிற்சிகள் நடந்துவருவதாகவும் எஸ்.பி.பியின் மகன் கூறியிருக்கிறார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி ,சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு காணொளி மூலம் கேட்டுக் கொண்டார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஓகஸ்ட் 14ஆம் திகதியன்று அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே, தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளதாக சரண் தெரிவித்துள்ளார்.

Comments