ஹட்டன் நஷனல் வங்கி; வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து, சின்னத் தொகைகளை மெல்லச் சுருட்டுகிறதா?

🕔 September 7, 2020

– அஹமட் –

ரியான காரணங்கள் எவையுமின்றி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து, ஒரு தொகைப் பணம் – வங்கியினால் ‘சுருட்டப்பட்ட’ சம்பவமொன்று அக்கரைப்பற்று ஹட்டன் நஷனல் வங்கிக் கிளையில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நஷனல் வங்கியின் அக்கரைப்பற்றுக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவரின் தொலைபேசிக்கு அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்தத் தகவலில் குறித்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து 800 ரூபாயை வங்கி எடுத்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த வாடிக்கையாளர் அவரின் கணக்கு தொடர்பான அறிக்கையை வங்கியிலிருந்து இரு தடவை பெற்றுக் கொண்டமைக்காக (கணக்கு அறிக்கையை ஒரு தடவை பெற்றுக்கொள்வதற்கு 400 ரூபாய் எனும் வகையில்), இந்தப் பணத் தொகையை அறவிடுவதாகவும், அந்த குறுந்தகவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவ்வாறான எந்தவித அறிக்கையினையும் வங்கியில் பெற்றுக் கொள்ளவில்லை என்பதனால், இது தொடர்பில் அக்கரைப்பற்று வங்கிக் கிளைக்குச் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, குறித்த வாடிக்கையாளர் கணக்கு அறிக்கைகளைப் பெற்றமைக்காகவே இவ்வாறு பணம் அறவிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் கூறிய வங்கி ஊழியர்கள், பின்னர் – தமது வங்கியினுடைய கணினி ‘சர்வர்’ (Computer Server) ‘அப்டேற்’ செய்யப்பட்டமையினால், இவ்வாறான நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

இருந்தபோதும், இந்த விவகாரம் தொடர்பில் எழுத்து மூல விளக்கம் ஒன்றை தனக்கு வழங்குமாறு, அக்கரைப்பற்று வங்கிக் கிளையினரிடம் குறித்த வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்தார். அவர்களும் வெள்ளிக்கிழமை (கடந்த 04ஆம் திகதி) வழங்குவதாக ஒப்புக் கொண்டனர். (ஆனால், இதுவரை எழுத்து மூல விளக்கம் வழங்கப்படவில்லை).

இதனையடுத்து குறித்த வாடிக்கையாளருக்கு, ஹட்டன் நஷனல் வங்கியின் கொழும்பிலுள்ள ‘HNB Connect’ பிரிவிலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில் பேசிய நபர்; சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அக்கரைப்பற்று வங்கிக் கிளையில் செய்த முறைப்பாடு பற்றி விசாரித்ததோடு, வாடிக்கையாளர் ஒருவர் கணக்கறிக்கை ஒன்றினை பெற்றால் மாத்திரமே – தாம் இவ்வாறு 400 ரூபாய் பணம் அறவிடுவதாகவும், இரண்டு முறை அவ்வாறான அறிக்கையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இதனை மறுத்த வாடிக்கையாளர், ‘இந்த விவகாரத்தை வங்கியின் மோசடியான செயற்பாடாகவே தான் கருதுவதாக’ தன்னை தொடர்பு கொண்ட வங்கி ஊழியரிடம் தெரிவித்ததோடு, இது தொடர்பில் தனக்கு எழுத்து மூலமான விளக்கம் ஒன்றினையும் வங்கி வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த நிலையில், குறித்த வாடிக்கையாளரின் முறைப்பாட்டினை தாம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த ‘HNB Connect’ பிரிவு ஊழியர், அந்த முறைப்பாட்டுக்கான இலக்கத்தையும் வழங்கினார். (இது தொடர்பான ஒலிப்பதிவுகள் உள்ளன).

இந்த தொலைபேசி அழைப்பு முடிந்த கையோடு, குறித்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து வங்கி ‘சுருட்டிக் கொண்ட’ 800 ரூபாய் பணம், மீண்டும் அந்த வாடிக்கையாளரின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு குறுந்தகவல்கள் கிடைத்தன.

“குறித்த வங்கி – தவறுதலாக இவ்வாறு வாடிக்கையாளரின் பணத்தை எடுத்திருந்தால், அந்த சம்பவத்துக்காக வாடிக்கையாளரிடம் ஒரு குறுந்தகவலின் ஊடாகவேனும் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், விடயம் அம்பலமானதும் – எடுத்த பணத்தை மீண்டும் எனது கணக்கில் சத்தமில்லாமல் வைப்புச் செய்யப்பட்டமையானது, வங்கி மீது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று, சம்பந்தப்பட்ட வாடிக்கையார் தெரிவிக்கின்றார்.

சுருட்டப்பட்ட பணம் வாடிக்கையாளருக்குக் கிடைத்து விட்ட போதிலும், இந்த இடத்தில் சில கேள்விகள் எழுகின்றமையைத் தவிர்க்க முடியவில்லை.

01) வாடிக்கையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளாத சேவைக்காக, அவரின் கணக்கிலிருந்து 800 ரூபாய் பணத்தை ஹட்டன் நஷனல் வங்கி ஏன் எடுத்துக் கொண்டது?

02) வங்கியின் குறுந்தகவல் சேவையினைப் பெற்றுக் கொள்ளாத வாடிக்கையாளர்கள், தமது வங்கிக் கணக்கில் இருந்து இவ்வாறு பணம் எடுக்கப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது என்பதால், வங்கி இவ்விடயத்தில் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதல்லவா?

03) எழுதப்படிக்கத் தெரியாத வாடிக்கையாளர்கள், தமது கணக்கிலிருந்து இவ்வாறு பணத் தொகைகள் மோசடியாகச் சுருட்டப்படுவதை அறிய மாட்டார்கள் என்பதனால், சுருட்டிய பணத்தை வங்கி அவ்வாறே வைத்துக் கொள்ள முடியுமல்லவா?

04) இவ்வாறு எத்தனை வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணம் சுருட்டப்பட்டது? எத்தனை வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பணம் மீளளிக்கப்பட்டது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

05) மேற்படி விவகாரம் சிலவேளை தவறுதலாக ஏற்பட்டதாக இருக்குமாயின், வாடிக்கையாளரிடம் ஏன் வங்கி மன்னிப்புக் கோரவில்லை?

இலங்கையில், தொலைபேசி சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியாகச் சுருட்டிக் கொள்வதாக, ஏராளமான புகார்கள் உள்ள நிலையில், தனியார் வங்கிகளும் இந்த மோசடியில் இறங்கி விட்டனவா என்கிற கேள்ளிகள் வாடிக்கையாளர்களிடையே எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு ஹட்டன் நஷனல் வங்கி பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிமை அவசியமாகும்.

குறிப்பு: சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை ஒப்புக் கொண்டபடி, இது குறித்து – எழுத்து மூல விளக்கத்தை வாடிக்கையாளருக்கு வழங்கத் தவறியமையினாலும், வாடிக்கையாளர்களை விழிப்பூட்டும் பொருட்டும் இந்தச் செய்தி பொதுநலன் கருதி வெளியிடப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்