ஆறுமுகன் மகள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்: வெளியான செய்தி குறித்து இ.தொ.காங்கிரஸ் அறிக்கை

🕔 August 26, 2020

– க. கிஷாந்தன்

திர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

எதிர் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே, அதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.

“விஜயலட்சுமி தொண்டமானின் அரசியல் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இ.தொ.கா.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலி தகவல் பரப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை. அது தொடர்பில் இ.தொ.கா. எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. எனவே, போலியான தகவல்களை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உரிய நேரத்தில் – உரிய முடிவுகளை எடுத்து, உரிய வகையில் மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் இயக்கமே இ.தொ.காவாகும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments