சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

🕔 August 13, 2020

– முன்ஸிப் அஹமட் –

“தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும் பிழையாக எனக்கு வழிகாட்டப்பட்டது. ஆனால், அவ்வாறான வழிகாட்டல்களைப் புறந்தள்ளி நேர்மையான அரசியலைச் செய்த போது, மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். முஷாரப் தெரிவித்தார்.

தனது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தோருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அவரின் சொந்த ஊரான பொத்துவிலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இந்த விடயத்தை முஷாரப் கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“விருப்பு வாக்கு முறைமையின் கீழ் ஒருவர் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது, ஓர் அஞ்சலோட்டத்துக்கு ஒப்பானது. அந்த வகையில் எமது கட்சி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, கட்சிக்காக வாக்குகளைப் பெற்றெடுத்த அனைத்து வேட்பாளர்களும் என்னுடைய வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த வெற்றி – ஒரு கூட்டு முயற்சியாகும். பலரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இதில் அடங்கியுள்ளது.

எனக்கு கிடைத்திருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஒரு அமானிதமாகவே நான் பார்க்கிறேன். அரசியல் என்பது இறை வணக்கத்துக்கு ஒப்பானது என்று எமது கட்சித் தலைவர் றிசாட் பதியுதீன் எப்போதும் சொல்வார். நானும் அவ்வாறுதான் அரசியலைப் பார்க்கிறேன்.

என்னுடைய தேர்தல் நடவடிக்கைகளின் போது, வாக்குகளுக்காக நான் பணம் கொடுக்கவில்லை. மாற்று அரசியல்வாதிகள் செய்வதைப் போல் வாக்குகளுக்குப் பணம் கொடுத்து, தேர்தலை ஒரு பண்டமாற்று வியாபாரம் போல் நான் செய்யவில்லை.

மாமூல் அரசியலுக்கு மாற்றாக, ஊழலற்ற அரசியலை நடத்திக் காட்டுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய மக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

மக்கள் நேர்மையானவர்கள், மக்களுக்கு வழிகாட்டக் கூடிய தலைவர்கள்தான் இல்லை.

எனது பதவிக் காலத்திலும் தூய்மையான, நேர்மையான அரசியலைச் செய்து காட்டி – அம்பாறை மாவட்டத்தில் முன்மாதிரியான அரசியல் காலசாரத்தை உருவாக்கப் பாடுபடுவேன்.

குறித்த ஒரு பிரதேசத்துக்குரியவராக அன்றி, முழு அம்பாறை மாவட்டத்துக்குமான நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருப்பேன். என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

எனது வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ள அனைத்து தரப்பினருக்கும், சக வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அரசாங்கத்துக்கு ஆரவளிக்கவும் தயார்

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முஷாரப்;

“தற்போதைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்களாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவும், இந்த அரசாங்கத்தை ஆசீர்வதிக்கவும் நாம் தயாராக உள்ளோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவொரு சாதகமான வெளிப்பாடுகளையும் இந்த அரசாங்கம் காண்பிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு என்னிடம் உள்ளது.

தேர்தலுக்காக முஸ்லிம்களுக்கு எதிரான கோஷமொன்ற இந்த அரசாங்கம் காண்பித்து விட்டு, தேர்தலின் பின்னர் தமது நிலைப்பாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்தவும் கூடும். அவ்வாறான ஒரு சூழ்நிலை வருமாக இருந்தால், அவர்களுடன் இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என்பது – எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எனவே, கால சூழ்நிலைதான் நாம் எப்படி இயங்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும்” என்றும் தெரிவித்தார்.

Comments