தலைவிதி: எழுதுவதற்கான கையேடு

🕔 August 4, 2020

முகம்மது தம்பி மரைக்கார்

டந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ளது. 196 பேரைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3652 பேர் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். 3800 வேட்பாளர்கள் சுயேட்சைக் குழுவினர்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவரைத் தெரிவு செய்வதென்பது மிகவும் முக்கியமான செயற்பாடாகும். அடுத்து வரும் 05 வருடங்களுக்கான அரசியல் தலைவிதியை இந்தத் தெரிவுதான் தீர்மானிக்கப் போகின்றது.

எனவே தமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வாக்காளர்கள் புரிந்து செயற்பட வேண்டியமை அவசியமாகும்.

தெரிவு

தேர்தலில் யாரைத் தெரிவு செய்வது என்பதை, ஆகக் குறைந்தது இரண்டு வகைப்படுத்த முடியும்.

  1. விருப்பமானவர்களைத் தெரிவு செய்தல்
  2. பொருத்தமானவர் அல்லது தகுதியானவர்களைத் தெரிவு செய்தல்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நமக்கு விருப்பமானவராக இருந்தாலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான தகுதிகள் அற்றவராக இருக்கக் கூடும். எனவே, தகுதியானவர்களைத் தெரிவு செய்தல் என்பது வாக்காளர்களுக்கான மிகப்பெரும் பொறுப்பாகும்.

அப்படியென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்கிற கேள்வி முக்கியமானது. இது குறித்து சிவில் அமைப்புக்கள் வாக்காளர்களைத் தெளிவுபடுத்தி வருகின்றன. அதேவேளை, வாக்காளர்களும் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

வன்முறையற்றவர், இனைங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு வாக்களிக்குமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றமையினை நாம் காணக்கூடியதாக உள்ளது.

இனவாதம் பேசி, சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி, அதனூடாக மக்களைச் சூடேற்றி வாக்குகளைச் சேகரிக்கலாம் என நம்பி, செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேட்பாளர்களை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் வர்த்தகங்களுடன் தொடர்புடையவர்கள் வேட்பாளர்களாக இருப்பார்களாயின் அவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபானம் வழங்கும் வேட்பாளர்களையும் போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு மக்கள் யாரைத் தெரிவு செய்கின்றார்களோ, அவர்தான் குறித்த மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருக்கப் போகின்றார். அவரை வைத்துத்துத்தான் அவருக்கு வாக்களித்தவர்கள் மதிப்பிடப்படுவார்கள் என்பதை எப்போதும் வாக்காளர்கள் நினைவில் வைத்துக் கொள்தல் வேண்டும்.

படித்தவர்கள், பண்பாளர்கள் நமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக இருப்பது குறித்து நாம் பெருமைப்பட முடியும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆனாலும், தேர்தலில் யாரைத் தெரிவு செய்வது என்பது வாக்காளர்களுக்கு சவாலான விடயம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

புரிதல்

மக்களில் அதிகமானோர் அரசியலை கட்சி சார்ந்துதான் புரிந்து வைத்திருக்கின்றனர். அதனால், தேர்தல்களில் தமக்குப் பிடித்த கட்சியினைத் தாண்டி, வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கு பெரும்பாலானோர் தயாராக இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

எனவே, தமக்கு விருப்பமான கட்சி நிறுத்தும் வேட்பாளர்களில் இருந்தே, தமது தெரிவை அநேகமானோர் மேற்கொள்கின்றனர்.

இந்தத் தேர்தலில் சில வேட்பாளர்கள் பெரும் தொகையான பணத்தைச் செலவிடுகின்றமையினை நாம் காண்கிறோம். தமது பிரசார நடவடிக்கைகளுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் அதிக பணத்தை செலவிடும் இவர்கள், வாக்காளர்களுக்கும் பணத்தை பகிர்ந்தளிக்கின்றனர். இவ்வாறான வேட்பாளர்கள் குறித்தும் வாக்காளர்கள் அவதானமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினைப் பெறுவதற்காக தேர்தல் காலத்தில் பல கோடி ரூபாய்களைச் செலவு செய்யும் இவ்வாறானவர்கள் தேர்தலில் வெற்றியீட்டினால், தாம் செலவிட்ட பணத்தை, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தியே சட்டவிரோதமாக மீளவும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதையும் மக்கள் மறந்து விடக் கூடாது.

மறுபுறமாக, நாடாளுமன்றத் தேர்தலொன்றில் பல கோடி ரூபாய்களை ஒருவர் செலவு செய்கின்றார் என்றால், அவருக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பாக தனது சொத்து விவரங்களை அறிவிப்பது ஒவ்வொரு வேட்பாளரினதும் பொறுப்பாகும் என ட்ரான்ஸ்பேரன்ஸி சிறிலங்கா அமைப்பு கூறுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் போட்டியிடும் 7452 வேட்பாளர்களில் சிலர் மட்டுமே அறிவித்துள்ளார்கள்.

அக்கறையின்மை

ஆனால் இந்த விடயங்களிலெல்லாம் மக்களில் பெரும்பாலானோர் அக்கறை காட்டுவதில்லை. தகுதியானவர்களுக்கு வாக்களிப்பதை விடவும், விருப்பமானவர்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கே மக்களில் அதிகமானோர் விரும்புகின்றார்கள். இதன் காரணமாக, ‘தகுதி’யானவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பின்வாங்குகின்றமையினையும் நாம் கண்டு வருகின்றோம்.

சிலவேளைகளில், ‘தகுதியான வேட்பாளர்களாக இருப்பார்கள்’ என நாம் நம்புகின்றவர்கள் கூட, விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் போட்டியின் போது ஜனநாயக விரோதிகளாகவும் வன்முறையாளர்களாகவும் நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

சில வேட்பாளர்கள் தமது பிரதேசத்துக்குள் தங்கள் கட்சியில் போட்டியிடும் சக வேட்பாளர்கள் வந்து வாக்காளர்களைச் சந்திப்பதற்கே, அனுமதி மறுத்தமையினையும் இந்தக் காலத்தில் நாம் கண்டோம். வேறு சில வேட்பாளர்கள், கூட்டுச் சேர்ந்து கொண்டு தமக்கிடையில் மட்டும் விருப்பு வாக்குகளைப் பகிர்ந்து கொள்வதென தீர்மானித்துள்ளமையினையும் அறிய முடிகிறது. இந்தச் செயற்பாடுகள் ஜனநாயக விரோதமானவையாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ‘பிரதான’ சின்னத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் வேட்பாளர்கள், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையினை அறிந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர், இது குறித்து தனது கண்டனங்களை தேர்தல் பிரசார மேடைகளிலேயே தெரிவித்தார். “விருப்பு வாக்குகளுக்காக இவ்வாறு செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று, பகிரங்கமாகவே அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டிய கல்வித் தகைமை

இலங்கையில் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கு வாக்காளர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய – குறைந்தபட்ச கல்வித் தகைமை குறித்து எவ்விதமான சட்ட திட்டங்களும் கிடையாது. அதனால்தான், க.பொ.த. சாதாரண தரம் சித்தியடையாத 94 பேர் கடந்த நாடாளுமன்றில் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நாடாளுமன்றம் என்பது சட்டவாக்க சபையாகும். அங்குதான் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. சட்டங்களை உருவாக்கும் ஒரு சபையிலுள்ள 225 உறுப்பினர்களில் 94 பேர், க.பொ.த. சாதாரண தரத்தில் கூட சித்தியடையாதவர்களாக இருந்துள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும். இலங்கையில் சிற்றூழியராக அரச தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதென்றால் கூட, கல்வித் தகைமையாக க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதை இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமாக அமையும்.

ஆகவே, அரசியல் கட்சிகள் மீதான விருப்பு வெறுப்பு, தனி மனிதர்கள் மீதான ஈடுபாடு போன்றவற்றுக்கு அப்பால் நின்று; ‘இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். அதுதான் சரியானதொரு தெரிவாக இருப்பதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளதொரு தீர்மானமாக அமையும்.

கவனிக்க வேண்டியவை

முன்னைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் மிக அதிகமானோர் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகின்றார்கள். ஆனால் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதற்காக மட்டும், அவர்களுக்கு வாக்களித்து விட முடியுமா?

கடந்த ஆட்சிக் காலத்தில் 414 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 20 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்குச் சென்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். அவ்வாறானவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதையும் வாக்காளர்கள் மனதில் வைத்துக் கொள்தல் வேண்டும்.

நாடாளுமன்றம் என்பது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பேசுவதற்கும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்பினைப் பெற்றுக் கொள்வதற்குமான உயர் சபையாகும். ஆனால், கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றாத, ஒன்றிரண்டு தடவை மாத்திரமே உரையாற்றிய உறுப்பினர்களும் இருந்துள்ளனர். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்வதால் ஒரு சமூகம் என்ன பலனை அடைந்து கொள்ள முடியும்?

ஆகவே, நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எவ்வாறான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதையும், எப்படியானவர்களை நிராகரிக்க வேண்டும் என்பதையும், வாக்காளர்கள் புரிந்து – தெளிந்து செயற்படுதல் அவசியமாகும்.

நாறிப் போய்க்கிடக்கும் ‘சாக்கடை’ அரசியலை சுத்தப்படுத்தும் தொழிலாளர்களாக, நாளைய தேர்தல் தினத்தில் நாம் செயற்பட வேண்டும். நமது தெரிவுகளும், வாக்களிப்பும் அற்கமைவானதாக இருக்க வேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (04 ஓகஸ்ட் 2020)

Comments