சவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை

🕔 July 11, 2020

– எஸ். அஷ்ரப்கான் –

தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து இம்முறை தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல) போட்டியிடும் வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் அங்கு உரையாற்றியபோது,

“நீங்கள் என்ன சேவையை செய்து விட்டு இப்போது வாக்கு கேட்டு வருகிறீர்கள் என்று சிலர் கேட்கின்றார்கள். மறைந்த தலைவரின் காலத்தில் இருளில் மூழ்கியிருந்த இந்த மாளிகைக்காடு பிரதேசத்திற்கு மின்சாரத்தை வழங்கியது வை.எல்.எஸ். ஹமீட் என்பதை மாளிகைக்காடு மக்கள் மறந்துவிடக்கூடாது.

மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் செயலாளராக இருந்துகொண்டு எவ்வித அதிகாரமுமின்றி பல்வேறு சேவைகளை நாம் செய்துள்ளோம். அதனை இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு சிலவேளை தெரியாமல் இருக்கலாம். ஆனால் வரலாறுகளை யாரும் மறுக்க முடியாது.

இம்மாவட்ட முஸ்லிம் மக்கள் தங்களது வாக்குகளால் கடந்த 18 வருட காலமாக ஒரே பிரதிநிதிகளை தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தனர். அவர்களால் அம்பாறை மாவட்ட மக்களுக்கு என்ன உருப்படியான சேவையை செய்ய முடிந்தது. இந்த கேள்வியை மக்கள், அதிகாரம் வழங்கி நாடாளுமன்ற கதிரைகளை சூடாக்கியவர்களை பார்த்தே கேட்க வேண்டும்.

அவர்கள்தான் உருப்படியான எந்த சேவையையும் மக்களுக்கு செய்யாமல் காலத்திற்குக் காலம் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை சூறையாடுகின்ற பணியை மட்டும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். மக்கள் ஏமாளிகளாக இருந்தது மட்டுமே மீதியாகவுள்ளது. 

ஆனால் நாம் எவ்வித அதிகாரமுமில்லாமல் குறிப்பிடத்தக்களவு சேவைகளை நாம் சார்ந்த மக்களுக்கு செய்ததை முஸ்லிம்கள் மறக்கக்கூடாது. இப்போதுதான் நாம் அதிகாரத்தை கேட்டு உங்கள் முன் வந்துள்ளோம்.

அதுவும் இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல்  ஒரு சவால்மிக்க நாடாளுமன்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறுபான்மை இனமாகிய நாம் எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ளவும், உரிமைகளை வென்றெடுக்கவும் ஆளுமைமிக்க, அரசியல் அறிவுள்ளவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பவில்லை என்றால், எதிர்கால சந்ததிக்காக நாம் பாரிய துரோகமிழைத்தவர்களாக வரலாறு எங்களை குற்றம் காணாதா ?

இல்லை நாம் மீண்டும் அரசியலுக்கே தகுதியற்றவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு, தொடர்ந்தும்  முஸ்லிம்களின் முக வெற்றிலையான அம்பாறை மாவட்டத்தை பேரினவாதிகள் கபளீகரம் செய்வதற்கு இடமளிக்கப்போகின்றோமா ? என்பதை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

எனவேதான் எவ்வித அதிகாரமும் இல்லாதபோதும் மக்களுக்கு கணிசமான சேவைகளை செய்தவன் என்றவகையில் எதிர்வரும் பாராளுமன்றுன்கு மிகவும் பொருத்தமான ஒருவன் என்று நீங்கள் நம்பினால் என்னை பாராளுமன்றம் செல்வதற்கு உழையுங்கள். நான் மக்களுக்காக களம் காணுகின்றேன். மக்கள் தேவையே எமது இன்றைய காலகட்ட சேவையாகும்.

எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் களம் என்பது அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் ஆதரவாளர்களால் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இச் சூழ்நிலையில் மிகவும் புத்திசாதுரியமாக சிந்தித்து எமது பிரதேச மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் அபிவிருத்திக்குமாக எமது கைகளை பலப்படுத்துவதோடு, வெற்றியின் பங்காளர்களாக கல்முனை தொகுதி மக்கள் மட்டுமல்லாது திகாமடுள்ள மாவட்ட மக்களும் மாறவேண்டும்” என்றார்.

Comments