அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

🕔 June 24, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனையில் சில காலமாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

முன்னொரு காலத்தில் பேச்சுவாக்கில் மட்டுமே கேள்விப்பட்ட ‘ஹெரோயின்’ போன்ற போதைப் பொருட்கள், இன்று அட்டாளைச்சேனையில் கைக்கும் காலுக்குமாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.

இந்த நிலை ஏற்பட என்ன காரணம்? இதன் பின்னணியில் உள்ள ‘தலை’கள் யார்? என்பது குறித்து இங்குள்ள பலரும் அறிவார்கள். ஆனால், ‘நமக்கேன் வம்பு’ என்கிற மனநிலையில் அக்கறையற்று பலரும் இருக்கின்றனர்.

அட்டாளைச்சேனையில் உள்ள அரசியல் தலைவர்களோ, பெரிய பள்ளிவாசல் தலைமையோ இந்த விவகாரம் குறித்து எதுவித அக்கறைகளும் எடுக்கவில்லை என்பது இந்த ஊரின் சாபக்கேடாகும்.

‘அட்டாளைச்சேனைக்கு அரசியல் அதிகாரம் வேண்டும்’ என்று கோஷமிடுகின்றவர்கள், இந்த ஊர் – போதையற்ற பிரதேசமாக இருக்க வேண்டும் என சிந்திக்கத் தவறி வருகின்றனர்.

அண்மையில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அட்டாளைச்சேனையில் திடீரென மரணித்ததும், அவரின் மரணத்தின் பின்னணியில் ‘போதைப் பொருள்’ என்கிற விடயம் இருந்ததாகவும் பேசப்பட்டமை குறித்து பலரும் அறிவோம்.

இவ்வாறானதொரு மரணம் நமது வீட்டில் நிகழாத வரை, இந்த போதை மாபியாவுக்கு எதிராக நம்மில் அநேகர் எழுந்து நிற்கப் போவதில்லை. சிலர் – தமது வீட்டில் இந்த அவலம் நேர்ந்தாலும் அதற்கு எதிராக எழுந்து நிற்கப் போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

உங்கள் பிள்ளைகளின் கைகளுக்கு மிக அருகாமையில் கஞ்சா, ஹெரோயின், கொக்கொய்ன் மற்றும் ஐஸ் உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களும் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். ஏதோ ஒரு தருணத்தில் அவற்றினை அவர்கள் பாவிக்கக் கூடும் என்பதையும் அச்சத்துடன் நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

இந்த ஊருக்குள் இவ்வாறான போதைப் பொருள்கள் வருகின்றமைக்கு அரசியலும், அதிகாரங்களும் பின்னணியில் இருந்தன, இருக்கின்றன என்பதை நாம் மிகவும் பொறுப்புணர்வோடு இங்கு பதிவு செய்கின்றோம்.

அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அண்மையில் எழுத்து மூலம் முறையிட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

எனவே, அட்டாளைச்சேனை மட்டுமன்றி அனைத்து பிரதேசத்தவர்களும், இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது போதைப் பொருள் பாவிக்கும் வேட்பாளர்களையும், போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்ட வேட்பாளர்களையும் தோற்கடிக்கும் வகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் போது, அவர்கள் மென்மேலும் தமது வியாபாரத்தை அதிகரிக்கவே முயற்சிப்பார்கள். அந்த போதைப் பொருளால் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நமது வீட்டுப் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறி விடாதீர்கள்.

நமது ஊருக்கு அரசியல் அதிகாரம் இல்லாது விட்டால், நாம் ஒன்றும் ‘முழங்கையால்’ நீர் அருந்தப் போவதில்லை. ஆனால், அரசியல் ஊடாக நமக்குக் கிடைக்கும் பிரதிநிதிகள் போதைப் பொருள் மாபியாவுடன் தொடர்புபட்டவர்களாக இருந்து விட்டால், பின்னர் நமது ஊரும் – சந்ததிகளும் ‘அழிந்து’ விடும் என்பதை, ஒவ்வொரு பிரதேசத்தவரும் பொறுப்புணர்வுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே, போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கும் தீர்மானத்தை, ஓர் உறுதிமொழியாக நமக்குள் நாம் எடுத்துக் கொள்வோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்