‘ஒரு குழந்தை’ கொள்கை, சீனாவில் இனி இல்லை

🕔 October 30, 2015

China - 02சீனாவில், ஒரே குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளது.

ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கொள்கை, சீனாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆயினும், இனிமேல் சீன தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடாகவும், அதேவேளையில் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் விளங்கும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இது குறித்து 04 நாட்கள் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி விவாதித்தது.

இதனையடுத்து, ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் கொள்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக் கொள்கைதான் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்று சீன அரசு இதுவரை தெரிவித்து வந்தது.

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள இருந்த தடையானது, பலவேளைகளில் மிகவும் வலுக்கட்டாயமாக கையாளப்பட்டதாக, கடும் விமர்சனம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கொள்கையினால், சீன பொருளாதாரம் வளர்ச்சியுற்றதாக அரசு தரப்பினர் கூறிவந்தாலும், இதன் விளைவுகள் இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.

சீனாவில் வயதானவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆண் – பெண் பாலின விகிதாசாரத்தில் கடுமையான சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. மேலும் உழைக்கும் சக்தி பெருமளவு குறைந்து வருகிறது.

இதனையடுத்து 2013 ஆம்ஆண்டு குறைந்த அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிகமானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு குழந்தைக் கொள்கையால் சீனாவில் உள்ளார்ந்த அமைப்புகளில் திறன் குறைபாடு பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுத் திட்டக் கூட்டத்தில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இதில் சீன பொருளாதார வளர்ச்சி சரிவடைவதற்கான சாத்தியம் பற்றி, ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

2010 ஆம் ஆண்டு இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை, 2020 ஆம் ஆண்டு இரட்டிப்பாக்குவதற்கு சீன அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மிதமான வளம் குறித்து திட்டமிடும் சீனா, அதேவேளையில் அனைவரும் வளமாக வாழ்வதற்குத் தேவை ஆரோக்கியமான உழைப்பு சக்தியே என்று முடிவுக்கு வந்ததையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்