நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு

🕔 May 30, 2015

Kabeer haseem - 01– அஷ்ரப் ஏ. சமத் –

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான, இருபதாவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், தற்போதுள்ள முறையை அப்படியே வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து – பொதுத் தேர்தலொன்றுக்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தேர்தல் சீர் திருத்தச் சட்டம் எனும் விவகாரத்தினை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைக்க விடாமல் எதிர்க்கட்சியினர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கபீர் ஹாசீம் மேற்கண்ட விடயங்களைத் தெரவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவே நாம் விரும்புகின்றோம். 100 நாட்கள் முடிந்து தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் காலம் தாழ்த்துவதை ஜ.தே.கட்சி ஒருபோதும் விரும்பவில்லை. அடுத்த நாடாளுமன்றத்  தேர்தலில் நாம் கட்டாயம் வெற்றி பெற்று  பெரும்பான்மை ஆசனங்களைப்பெற்று ஆட்சியில்  அமர்வோம். அதில் மீண்டும் பிரதமராக ரணில் பதவி வகிப்பார். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை எப்படியாவது தோற்கடித்து, மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைப்பதற்காக, மிகக் கடுமையாக உழைத்தவர்களில் பலர் – இன்று, மைத்திரிபால வெற்றிபெற்றதும் அவருடன் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு 64 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, அவரை ஜனாதிபதியாக்கிய பெருமை – ஜ.தே.கட்சியையும்,  இதர சிறுபான்மைக் கட்சிகளையுமே  சாரும்.

20 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியவுடன்,  நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்த எதிர்க்கட்சியினரிடம், தற்போது – அந்த நிலைப்பாடு இல்லை.

புதிய தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும்  சிறுகட்சிக்களுக்குள்   இதுவரையும் ஒன்றுபட்ட கருத்து ஏற்படவில்லை.  தேர்தல் சீர்திருத்த சட்டம் எனும் விவகாரத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைக்க விடாமல் – அவர்கள் காலம் தாழ்த்துகின்றனர்.   நாடாளுமன்றத்தின் காலத்தைத்  தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர்.

இதேவேளை – பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக இவர்கள் சொல்கின்றனர். மேலும், கடந்த ஆட்சியில் இவர்கள் செய்த ஊழல் மோசடிகள் காரணமாக,  அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் தோற்று விடுவார்கள். இவர்களுடைய தொகுதி மக்களே – இவர்களை ஆதரிக்க தயாராக இல்லை.  தற்போதைய ஜனாதியிடம் சேர்ந்து கொண்டு, முன்னாள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய இவர்கள் செயற்படுகின்றனர்.

ஜ.தே.கட்சிக்கு   பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக  உள்ளனர். கடந்த மே தின கொண்டாட்டத்தில் இதனை நாங்கள் நிரூபித்தோம். ஜனாதிதிபதி மைத்திரி வெற்றி பெற்ற மறுதினமான – ஜனவரி 09ஆம் திகதியே, நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு நாம் விரும்பினோம்.

இருந்தும் ஜனாதிபதியின் 100 நாள் திட்டத்திற்காகவே அமைச்சரவையை நிறுவி, அதனூடாக சில வேலைகளைச் செய்துள்ளோம். தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன.  ஆகவேதான்  எமது நிலைப்பாட்டினை ஊடகவியலாளர்  ஊடாக இங்கு தெரிவிக்கின்றோம்.  உடனடியாக  20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். தாமதம் ஏற்படுமானால், இருக்கின்ற முறையே இருக்கட்டும்.  நாடாளுமன்றத்தினை உடன் கலைத்து தேர்தலுக்கு வாருங்கள். நாங்கள் ஒருபோதும் இந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு, எங்களை அலங்கரிக்க விரும்பவில்லை என்றார்.

இச் சந்திப்பில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்