இடிப்பது கோயில், படிப்பது தேவாரம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இரட்டை வேடம்

🕔 April 13, 2020

– அஹமட் –

திவு செய்யப்படாத ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைத்தளக் கணக்குகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயகப் பிரிவுக்கு முறையிடவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கு. சுகுனண் நேற்று ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

பதிவு செய்யப்படாத சில ஊடகங்களும், சில சமூக வலைத்தளக் கணக்காளர்களும் கொரோனா தொடர்பில் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் இதன்போது சுகுனண் கூறியிருந்தார்.

பொதுவாகப் பார்த்தால் இது நல்ல விடயம்தான். ஆனால், கல்முனைப் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் இதனைக் கூறியுள்ளமை அபத்தமாகத் தெரிகிறது.

கோயிலை இடித்து விட்டு தேவாரம் பாடுகின்றமை போல், டொக்டர் சுகுணனின் இந்தப் பேச்சு உள்ளது.

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட போது, அந்த நபரின் வீட்டுக்கு முன்பாக நின்றுகொண்டு, ‘பேஸ்புக்’ வழியாக நபரொருவர் நேரலை வழங்கியிருந்தமை பலரும் அறிந்ததே.

‘பேஸ்புக்’ இல் கணக்கு ஒன்றை திறந்து வைத்துக் கொண்டு, ஊடகம் என தம்மைத் தாமே சொல்லிக் கொண்டு, சட்ட விரோதமாக அல்லது உத்தியோகப்பற்றற் ரீதியில் செயற்பட்டு வரும் நபர்களே, இவ்வாறு அக்கரைப்பற்றில் நேரலை வழங்கியிருந்தனர்.

இவ்வாறான சட்டவிரோதமான அல்லது ஊடகம் என அங்கிகரிக்கப்படாத ‘பேஸ்புக்’ செயற்பாட்டாளர்கள் வழங்கிய அந்த நேரலையில் கலந்து கொண்டு, மிக நீண்ட பேட்டியொன்றினை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் அன்றைய தினம் வழங்கியிருந்தார்.

இப்படி ‘ஊடகப் போலி’கள் வழங்கிய நேரலையில் இணைந்து கொண்டு, கொரோனா தொற்று ஏற்பட்ட நபரொருவர் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை ஏகத்துக்கு அள்ளி வீசிய, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்; இப்போது ஞானம் ஏற்பட்டவர் போல்; “சமூக வலைத்தளங்களும், பதியப்படாத ஊடகங்களும் வதந்திகளைப் பரப்புகின்றன” என்று கூறுகின்றமையானது, கோயிலை இடித்து விட்டு, தேவாரம் படிப்பதற்கு ஒப்பானதாகும்.

நாட்டில் இதுவரையில் 210 பேர் (திங்கட்கிழமை பகல் 12.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர் பற்றிய தகவல்கள் மட்டும்தான், நேரலையான ஒளிபரப்பின் ஊடாக உலகெங்கும் பரப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசமான காரியத்தில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இணைந்திருந்தமை குறித்து, மக்களிடையே பாரிய விசனம் உள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், நேற்று முன்தினம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணனை தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு வினவியபோது, பதிலளிக்க முடியாமல் திணறிய நிலையில் தொலைபேசித் தொடர்பை இடையில் துண்டித்து விட்டார்.

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் தொடர்பில் பேஸ்புக் நேரலை வழங்கிய நபரிடம், மானநஷ்ட ஈடு கோரி, பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 50 லட்சம் ரூபாவை, மான நஷ்ட ஈடாக வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல், ஊடகப் போலிகள் வழங்கிய சட்ட விரோத நேரலையில் கலந்து கொண்டு, கொரோனா தொற்றாளர் பற்றிய தகவலை வழங்கிய கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணனுக்கு எதிராகவும், சுகாதார அமைச்சில் முறைப்யிடப்படுதல் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்பான செய்திகள்:

01) கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது?

02) அக்கரைப்பற்று விவகாரம்: பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம், 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம்

03) பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்