கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

🕔 April 3, 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கொவிட் – 19 தொற்றுக்குள்ளான உடல்களை அகற்றுவது தொடர்பான முறைமைகள்’ எனும் தலைப்பில் இன்று 03ஆம் திகதி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு

‘கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளின் உடல்களை அகற்றும் முறைகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் எமக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தக்கூடிய தொற்றுநோய்கள் சட்டத்தின் படி மேற்படி தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கான இரண்டு தேர்வுகள் உள்ளன என்று, எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட சட்டத்தின்படி, இந்த விவகாரத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பது உங்களிடமே உள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் கூட, மேற்படி உடல்களை அகற்றும் இரண்டு வகையான முறைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது குறித்து பொதுச் சுகாதாரம், நுண்ணுயிரியல்,சட்ட மருத்துவம், சட்டம், சட்ட மற்றும் மண் பகுப்பாய்வாளர்கள் போன்ற துறைசார்ந்தோருடன் கலந்தாலோசித்து, கொவிட் 19 இனால் இறக்கும் நோயாளிகளின் உடல்களை அகற்றும் விடயத்தில் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இத்தால் தங்களுக்கு சிபாரிசு செய்கிறது’.

குறித்த கடிதத்தின் பிரதிகள் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரமரின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Comments