கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

🕔 March 27, 2020

கொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவை விடவும் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் அதிக உயிரிழப்புக்களை சந்தித்துள்ளன. உலகளவில் பார்க்கும்போது 05 லட்சத்து 32 ஆயிரத்து 778 பேருக்கு கொவிட் – 19 எனும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மிகவும் வேகமாக மீண்டெழும்” என்று அமெரிக்க ஜனாதிபதி நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில்; உலகிலேயே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடு எனும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது.

ஆனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப்; நாம் செய்துவரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிக்கு திரும்பவேண்டும். நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்த ட்ரம்ப்; “அங்கு நிலவும் உண்மை நிலை குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

கொரேனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாக அமெரிக்கா முழுவதும் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரும் ஏப்ரல் 12ம் திகதி வரவுள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்னதாக, இந்த முடக்க நிலை திரும்ப பெறுவதற்கு, ட்ரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளமை அந்த நாட்டில் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

நேற்று அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முப்பத்து மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த நோய் தொற்று பாதிப்பின் காரணமாக தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக அரசிடம் முறையிட்டுள்ளனர்.

Comments