மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

🕔 March 13, 2020

– முன்ஸிப் அஹமட் –

லுவில் மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டமை காரணமாக தாம் பல்வேறு கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அப் பிராந்திய கடற்றொழிலாளர்கள், மீண்டும் அந்தத் துறைமுகத்தை மீனவர்களின் பாவனைக்காகத் திறந்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைகம், கடந்த மூன்று வருட காலமாக மூடப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமும் 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள படகுகள் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்துக்கு வந்து கடற்தொழிலில் ஈடுபடும் படகுகளும் தரித்து நிற்பதற்கு, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பயன்பட்டு வந்தது.

ஒலுவில் துறைமுகத்தில் 170 பெரிய படகுகளும், 200 சிறிய படகுகளும் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகு பாதையை சில காலங்களுக்கு முன்னர் மணல் மூடியமை காரணமாக, துறைமுகத்திலிருந்து கடலுக்கும் கடலிலில் இருந்து துறைமுகத்தினுள்ளும் படகுகளால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றும் நடவடிக்கைகள் அவ்வப்போது இடம்பெற்று வந்தபோதும், அவை வெற்றியளிக்கவில்லை.

இதனால், ஒலுவில் துறைமுகத்தில் தரித்து நின்ற படகுகள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவ்வாறு வெளியேறிய படகுகளின் உரிமையாளர்கள், தமது பகுதி கடற்கரைகளில் தத்தமது படகுகளை தரிக்கச் செய்து, தற்போது தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதும், துறைமுக வசதி இல்லாமை காரணமாக, தமது தொழில் நடவடிக்கையில் பல்வேறு இடர்பாடுகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றித் தருமாறு அப்போது அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளிடம் தாம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதும், தமது கோரிக்கைகள் கவனத்கொள்ளப்படவில்லை என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

எனவே, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோர் தமது பிரச்சினையில் கவனம் செலுத்துமாறும், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றி, அதனை தமது பாவனைக்காகத் திறந்து தருமாறும் மீனவர் கோருகின்றனர்.

Comments