ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்

🕔 May 29, 2015

Hakeem+Champikaபுதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடந்த புதன்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்ட 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டபோதே, ஹக்கீம் – சம்பிக்கவுக்கிடையிலான வாக்குவாதம் தொடங்கியுள்ளது.

சிறுபான்மைச் சமூகங்களையும், சிறிய அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் விடயங்கள், புதிய தேர்தல் முறை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் – அதற்கு தன்னுடைய பலத்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

இதன்போது, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க – உத்தேச திருத்தச் சட்ட நகலை ஆதரித்தும், அதற்கான திருத்தங்களை எதிர்த்தும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டார்.

“புதிய தேர்தல் சட்ட வரைபு தொடர்பில் முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அந்தச் சட்ட வரைபினை  மூடிமறைத்துத் தயாரிக்க முடியாது. மேலும், புதிய தேர்தல் சட்ட வரைபு தொடர்பாக – சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், அந்தச் சட்டத்தை தயாரிக்குமாறு, சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் முடியாது” என்றார் ஹக்கீம்.

இதன்போது, சிறுபான்மைச் சமூகங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் நன்மையளிக்கக்கூடிய  இரட்டை வாக்குச்சீட்டு முறைமை மற்றும் வெட்டுப் புள்ளி விடயம் போன்றவை தொடர்பில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க  கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தபோது,  வாக்குவாதம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

“இவற்றையெல்லாம் தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்” என,  சம்பிக்கவை  நோக்கி – அமைச்சர் ஹக்கீம் கடும் தொனியில் கேள்வியெழுப்பினார்.

இவ்வாறு தொடர்ந்து சென்ற வாக்குவாதம், ஒரு கட்டத்தில் –  கடும் வாய்ச் சண்டையாக மாறியது.

இந்த நிலையில, அமைச்சர் ஹக்கீமின் நிலைப்பாட்டை அமைச்சர்களான பழனி திகாம்பரம், றிசாட் பதியுதீன் ஆகியோர் ஆதரித்தனர்.

“உத்தேச தேர்தல் திருத்தம் பற்றி இன்னும் சரியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. சிறு பான்மைச் சமூகங்களையும், சிறிய கட்சிகளையும் சமாளிப்பதற்காக, இடையிடையே – மேலோட்டமாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால்,  சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் பற்றி அறிவுறுத்தல் வழங்குமளவுக்கு தீர்மானம் எவையும் எட்டப்படவில்லை” என, இதன்போது அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இறுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் விடயம் குறித்து  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்