சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர்

🕔 November 10, 2019

நாடு முழுவதிலும் சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தெரிகின்றன அதனால் மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்ட ம் நேற்று சனிக்கிழமை கல்குடா தொகுதியில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இது ஒர் அபூர்வமான மேடை. வழமைபோல் எங்கும் காணாத எத்தனையோ பேர் இந்த மேடையில் இருக்கின்றோம். இது நிகழ்வதற்கு காரணம் சஜித் பிரேமதாச என்கின்ற வெற்றி வேட்பாளர் என்றால் அது மிகையாகது.

வெவ்வேறு முகாம்களில் இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகளையும் இணைக்கின்ற ஒர் இணைப்புப் பாலமாக, சஜித் பிரேமதாசவை எங்களுடைய விருப்பத்துக்குரிய வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றோம்

1988ஆம் ஆண்டு சஜித்துடைய தந்தை ரணசிங்க பிரேமதாச இவரைப் போலதான். அன்றிருந்த ஐ.தே.கட்சி அரசாங்கம் தட்டில் வைத்து அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தாரைவார்க்கவில்லை. கொஞ்சம் இழுத்தடிப்புச் செய்தார்கள். கடைசியில் அவர் தோல்வியை தழுவட்டும் என்ற நோக்கத்துடனேயே வேட்பாளர் பதவியைக் கொடுத்தார்கள்.

அப்பொழுது வடக்கிலும் யுத்தம், தெற்கிலும் கிளர்ச்சி. வடக்கில் அகோர யுத்தம், தெற்கில் ஜே.வி.பி.யுடைய ஆயுதப் போராட்டம். இவற்றுக்கிடையில் வெற்றிவாய்ப்பே இல்லை என நினைத்தார்கள். 11 வருட கால ஐ.தே.கட்சியின் கீழ் பலவிதமான விஷயங்களில் மக்கள் வெறுப்படைந்த நிலையில் ஒரு வேட்பாளராக நியமிக்கப்பட்ட ரணசிங்க பிரேமதாசவை இறுதி நேரத்தில் ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் எடுத்த முடிவு, இந்த நாட்டின் தலைவிதியையே தலைகீழாக மாற்றியது.

பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பைப் பற்றி யாரும் கனவுகூட காணமுடியாத ஒரு நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில், அவரை மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியேயாகும்.

நான்கரை வருடமாக இருக்கின்ற எங்களுடைய ஆட்சிக்காலத்தில் எவ்வளவுதான் அபிவிருத்தி செய்திருந்தாலும், மக்கள் மத்தியில் ஆங்காங்கே விமர்சனங்கள் இல்லாமலில்லை. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு யுக மாற்றம் தேவை. அந்த யுக மாற்றத்திற்கான அடையாளம் சஜித் பிரேமாச என்று முன்கூட்டியே பேசத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். பேசுவது மாத்திரமல்ல ஐ.தே.கட்சியே முடிவெடுக்க இழுத்தடிப்புச் செய்து கொண்டிருந்தபோது, அதை தைரியமாக எடுத்துச் சொல்லி அதன் மூலம் இந்த யுக மாற்றத்திற்கு வழிகோலியவர்களில் நானும் ஒருவன். அதனால்தான் நான் இன்று மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

நாடுமுழுவதிலும் இன்று எதிர்பாராத மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், சஜித் பிரேமதாசவுடைய கூட்டங்கள் எல்லாம் இன்று மாற்றுத்தரப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் சிம்மசொப்பனமாகவும் மாறியிருக்கின்றது. வேறு வழியில்லமால் திரும்பவும் இனவாதத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். அப்பட்டமான இனவாதத்தை மேடைகளில் கக்குகின்றார்கள். மிக மோசமான, கீழ்தரமான, மட்டகரமான கதைகளை கதைக்கின்றார்கள்.

ஆனால் நோன்புகாலத்தில் சைத்தானை கட்டிப்போடுகின்ற மாதிரி, அந்த பக்கத்தில் இனவாதம் பேசுகின்றவர்களை அடக்கி வாசிக்கமாறு சொன்னாலும், இடையிடையே அவர்களுடைய சுபாவமும் சுயரூபமும் வெளியியே வந்து விடுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு தாமதிக்கின்றது என்று அதையும் கொஞ்சம் பேசிக் கொண்டு திரிந்தார்கள். இப்போது அவர்களும் முடிவெடுத்தாகிவிட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கத்துடன் இன்று காலையில் கதைத்தேன். அவர்கள் இன்றிலிருந்து வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்களை ஆரம்பிப்பதாகச் சொன்னார். சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைப்பதற்கான பிரசார வேலைகளை இன்று தொடக்கம் முழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரல்ல, நாடு முழுவதிலும் செய்ய ஆரம்பித்துள்ளோம். அவர்களும் கூட்டங்களை போட்டு தங்கள் பக்க நியாயங்களை சொல்ல இருக்கின்றார்கள்.

நாடு முழுவதிலும் இன்று சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தெரிகின்றன. மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர். ஒரு சில தனியார் ஊடகங்களிலேயே ஊதிப்பெருப்பிக்கின்ற பிரச்சாரத்தை செய்கின்றனர். இந்த தனியார் ஊடகங்கள் எப்படிப்போனலும் இன்று அரச ஊடகங்களிலும் அளவுக்கதிகமாகய எங்களுடைய பிரசாரங்கள் பெரிதாக தூக்கிப்பிடிக்கப்படாமல் ,ஒரு யுக மாற்றம் மிக அமைதியாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

சஜித் பிரேமதாச போகின்ற இடங்களில் எல்லாம் ஆரவாரமாக கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒர் அமைதிப்புரட்சி அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் தான், நாங்கள் இன்று இந்த கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்