வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு, கட்சியின் கூட்டங்களைக் கூட்டி வாக்கெடுப்பினை நடத்தி, கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தான் தெரிவித்ததாகவும் இதன்போது சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான மக்கள் ஆணை தனக்கு இருக்கின்றது என்றும் சஜித் இதன்போது தெரிவித்தார்.
அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவிர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.