குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்
பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டிய அதன் பவள விழா நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோது சேர் ராசிக் பரீட்டின் நடாளுமன்ற உரைகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு உரையாற்றினர். சோனக இஸ்லாமிய கலாசார நிலைய தலைவர் ஒமர் காமில் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது;
“சேர் ராசிக் பரீட் காலனித்துவக் காலத்திலும் சுதந்திரத்திற்கு பிந்திய நாடாளுமன்ற ஜனநாயக காலத்திலும் இலங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பவராக விளங்கினார். ஆவர் மூதவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் நீண்டகாலம் சேவையாற்றினார். 1893இல் டிசம்பர் 29ஆம் திகதி செல்வந்த குடும்பமொன்றில் பிறந்த அவர் சமூக அந்தஸ்தும் செல்வச் செழிப்பும் மிக்கவராக விளங்கினார்.
1915ஆம் ஆண்டும் இனக்கலவரத்தின் போதும் முதலாவது உலகப் போர் முரசு அறையப்பட்டுக் கொண்டிருந்த போதும் கொழும்பு நகர காவற்படையில் ஒரு லெப்டினன் ஆகவும் அவர் பணியாற்றியிருக்கின்றார்.
கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான ராசிக் பரீட், பின்னாளில் புகழ்பூத்த இலங்கையின் அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்களான டீ.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன்கொத்தலாவல, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஸ்ரீரிமாவோ பண்டாரநாயக்க போன்ரோருடன் நல்லுறவைப் பேணிவந்தார். தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராவும் பணியாற்றினார்.
அவரது தந்தை டபிள்யூ.எம். அப்துல் ரஹ்மான் சட்டசபை உறுப்பினராக இருந்ததோடு அவரது பாட்டனார் அரசி மரைக்கார், வாப்பிச்சி மரைக்கார் ஒரு கட்டடக்கலை நிபுணராக திகழ்ந்ததோடு காலனித்துவ ஆட்சியின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக மிளிர்ந்து கொண்டிருக்கும் தேசிய நூதனசாலையின் சிற்பியாக இன்றும் போற்றப்படுகின்றார்.
அவரது பாட்டனார் கொழும்பு சாஹிரா கல்லூரியை ஸ்தாபித்தார். சேர் ராசிக் பரீட் – பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியை ஆரம்பித்தது மட்டுமல்ல, அதற்குரிய நிலத்தையும் அன்பளிப்புச் செய்தார்.
தன்னலமற்ற சேவையினூடாக பொதுவாக வறிய மக்கள் வாழ்ந்த கொழும்பு நகரின் பின்தங்கிய பிரதேசங்களில் அவர் மகப்பேற்று நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவினார். காலனித்துவக் காலத்திலிருந்து சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தினூடாக தேசிய நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதேவேளையில், தான் சார்ந்த சமூகத்தின் தனித்துவ அடையாளத்தையும் கலாசார விழுமியங்களையும் பேணிப்பாதுகாப்பதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.
வாழ்க்கையில் தனக்கென சில குறிக்கோள்களை கொண்டிருந்த அவர் 1930ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரானார். காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு, விடுதலையை வேண்டி நின்ற தேசப்பற்றாளர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்ற துணிந்த அவர், முஸ்லிம்களின் அரசியலில் சமூக அரசியல் செல்நெறியை வகுப்பதில் ஓரளவுக்கு முன்னேறியிருந்தார்.
கிழக்கு மாகாண அரசியலிலும் அவரது கரிசனை இருந்தது. நூலொன்றில் இவ்வாறு எழுதியுள்ளார். ‘கல்குடாவை எடுத்துக் கொண்டால் 40 வீத முஸ்லிம் சனத்தொகையும், இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் 25 வீத முஸ்லிம்களும் காணப்படுகின்றனர். ஆகையால் சோனfர்களும், தமிழர்களும் அங்கு மகிழ்ச்சிகரமான குடும்பத்தினராக இருப்பார்கள்’ என்றார்.
அக்காலத்தில் அகில இலங்கை சோனகர் சங்கத்தினருக்கும், அகில இலங்கை முஸ்லிம் லீக் இற்குமிடையே போட்டி நிலைமை காணப்பட்டது.
சிங்களத்தை அரச கருமமொழியாக்கும் சட்டத்தை அவர் வரவேற்றதன் பின்னணியில் இந்திய சமூகவியலாளர் ஒருவர் எழுதும் பொழுது, ‘மேலாதிக்க சிங்கள தேசியவாத நிகழ்ச்சி நிரலை சேர் ராசிக் பரீட் ஆதரித்ததற்கு ஏதுவாக வசதிபடைத்த மற்றும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட முஸ்லிம்கள் சிங்கள மொழி பேசப்படும் பிரதேசங்களிலேயே வசித்து வந்ததமை’ ஆகும் என்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளை விடுமுறை தினமாக ஆக்குவதற்கு அவர் முன்வைத்த கோரிக்கையை அவரது வார்த்தைகளிலேயே சொல்லுவதென்றால், ‘மன்னிக்கவும், அன்று நான் இங்கிருக்கவில்லை. பௌத்தர்கள் 12 நாட்களை மேலதிக விடுமுறை தினங்களாக பெறும் பொழுது, முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பிறந்த நாள் விடுமுறை மறுக்கப்பட்டிருக்கின்றது. நான் பௌத்தர்களின் உரிமைகளுக்கு எதிரானவனல்ல. ஆனால் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்காதீர்கள். இந்த நாட்டில் வாழும் ஆறு லட்சம் முஸ்லிம்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் எங்களது உரிமைகளையே கேட்கின்றோம். இது ஒரு சுதந்திரமான நாடு நாங்கள் சுதந்திரமாகவே எங்களது வாக்குகளை வழங்கினோம்’ என்றார்.
சேர் ராசிக் பரீட் ஒருபோதும் வார்த்தைகளை மாற்றிப் பேசியவர் அல்லர். இந்திய முஸ்லிம் பூர்வீக அடையாளம் என்பதைவிட இலங்கை சோனகர் என்ற அடையாளப்படுத்தலுக்கு அவர் முக்கியத்துவம் வழங்கினார். கரையோர முஸ்லிம்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை சோனர் என்ற வார்த்தைப் பிரயோகத்தில் அவர் பிடிவாதமாக இருந்தார். குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள் அவரது நாடாளுமன்ற உரைகளில் வெளிப்பட்டன.
சேர் ராசிக் பரீட்டின் நாடாளுமன்ற உரைகளில் மரணதண்டனையை ஒத்தி வைத்தல், வாடகை குடியிருப்பாளர்களின் வீடுகள் தொடர்பான விடயம் இலங்கை அரசியலமைப்புத் திருத்தம் பற்றியவை முக்கியமானவை.
அவர் நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றி பேசியிருக்கின்றார். அணிந்திருந்த நேர்த்தியான தூய உடையில் கோட்டில் ஓர்கிட் மலர் அலங்கரிக்கத்தக்கதாக அவர் பேசியதெல்லாம் கல்குடா, காத்தான்குடி, கண்டி மற்றும் கிரிந்த போன்ற இலங்கையின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் துயரக்கதையையேயாகும். குரல் எழுப்ப சக்தியற்றிருந்தவர்களுக்காக அவர் குரல் கொடுத்தார்.
1958ஆம் ஆண்டு இனக்கலவரத்தைப் பற்றி அவர் நாடாளுமன்றத்தில் பேசிய பொழுது; 1915ஆம் ஆண்டு மற்றும் 1958ஆம் ஆண்டு கலவரங்கள் இருண்ட நாட்கள் என்றார். அவை பற்றி குறிப்பிடா விட்டால் நான் எனது கடமையில் தவறிவிட்டவனாகி விடுவேன் என்றார்.
பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்கள் ஆக பாவிக்கப்படுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களாக வாழ்கின்ற போதிலும் இலங்கையர் என்ற தேசிய உணர்வுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை சேர் ராசிக் பரீட் வலியுறுத்தி வந்திருக்கின்றார். விடாப்பிடித்தனம், பிரத்தியேகவாதம் என்பவற்றில் ஊறிப்போயிருந்த முஸ்லிம்களின் ஒரு சாராரை சரிவர நெகிழ்வுத் தன்மையுடன் நெறிப்படுத்துவதற்காக அவர் பாடுபட்டிருக்கின்றார்.
சேர் ராசிக் பரீட்டின் அணுகுமுறையைப் பொறுத்தவரை எமது மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களிடம் சில ஒத்த தன்மைகள் காணப்பட்டன. அர்த்தபுஷ்டியுடனான அதிகாரப் பரவலாக்கம் பற்றிய தலைவர் அஷ்ரப் அவர்களின் பார்வை, சேர் ராசிக் பரீட்டின் நோக்கிலிருந்து அதிகம் வேறுபடவில்லை” என்றார்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)