ஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை

🕔 September 2, 2019

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த  போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி  அதிபர் எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற  விழாவில் அமைச்சர் மேலும் கூறுகையில்;

“அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகம் – பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றது.சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களை போன்றவர்களுக்கும் சொல்லொணாத நெருக்கடிகளையும், துன்பங்களையும்  இனவாதிகள் தருகின்றனர். செய்யாத குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்ற அல்லது துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கின்ற நிலையை  திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். சகோதர சிங்கள சமூகத்தை தூண்டி, அவர்களை குழப்பி இனக்கலவரங்களை உருவாக்குவதே  இவர்களின் நோக்கமாக உள்ளது.

சிறுபான்மை சமூகத்துக்கு கடந்தகாலங்களில்  கசப்பான வரலாறுகள் ஏற்பட்டுள்ளன.  யுத்தப்பாதிப்பு, உள்நாட்டு இடப்பெயர்வு, புலம்பெயர்வு, முள்ளிவாய்க்கால் தொடக்கம் மெனிக்பாம் வரையான அகதி வாழ்வு – சீரழிவு, காணாமல் போனோர் துன்பம், சொந்த பந்தங்களை இழந்தோர் துயரம் என்ற நீண்ட மனக்காயங்களுடன் வாழும் இந்த சமுதாயத்தை சீண்டியும் தீண்டியும் தமது காரியங்களை அடைவதற்காக ஒருகூட்டம் திட்டமிட்டு செயற்படுகின்றது.

இந்த வகையில் நமெக்கெதிரான சதிகளை முறியடிக்கும் ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது. இது பாடசாலைகளிலேயே உருவாக்கப்படவேண்டும். ஒரு பாடசாலையின் அதிபர் ஆளுமையுள்ளவராகவும் ஆற்றல் உள்ளவராகவும் இருக்கும்போதுதான் ஆசிரியர்களின் துணையுடனும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்ட முடியும்.

மாணவர்களுக்கு மனிதப்பண்பை ஆசிரியர்கள் புகட்ட வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பாங்கு, பரஸ்பர விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவற்றை பாடசாலைகளிலே வளர்த்தெடுப்பதன் மூலம் மனித குலத்தின் மாண்பை உருவாக்க முடியும்.

மாணவர்களுக்கு  மொழிவளம் முக்கியமானது. குறிப்பாக பிறமொழிகளிலே பாண்டித்தியம் தேவைப்படுகின்றது. நாங்கள் படிக்கும் காலத்திலே வடக்கிலே சிங்கள மொழி கற்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. பல்கலைக்கழகங்களிலும், கடைத்தெருக்களிலும்  அங்கும் இங்கும் பொறுக்கி எடுத்த சிங்கள சொற்களை பயன்படுத்தியே  இப்போது  சிங்களம் பேசுகின்றோம். ஆனால் இன்றைய நிகழ்விலே சிங்கள மொழியில் மாணவி ஒருவர் அறிவிப்பு செய்தார். அந்த அளவுக்கு கல்விநிலை மாறியிருக்கின்றது. இது இன்னும் விருத்திசெய்யப்படவேண்டும். திறமையான மாணவர்களை ஊக்குவிக்க அனைவரும் உதவவேண்டும். எதிர்கால சிற்பிகளான மாணவ செல்வங்கள் நமக்கு மாணிக்கம் போன்றவர்கள். அவர்களுக்கு நல்லபழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம், சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த காலங்களிலேயே இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையீனம்,குரோத உணர்வினால் இந்தநாடு குட்டிசுவராகியது. மீண்டும் இந்த நிலை தொடருமானால் அதல பாதாழத்துக்கே இந்த நாடு செல்லும். மன்னார் மாவட்டம் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள்  ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் ஒருமுன்மாதிரியான பிரதேசம். எனினும் கடந்தகாலங்களில் சமூகங்களுக்குக்கிடையில் மதங்களுக்கிடையில் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தியதனால் பல  துன்பங்களை சந்தித்தோம். இதற்கு இனிமேலும் நாங்கள்  அனுமதிக்க முடியாது. இவ்வாறானவர்களை  அடையாளம் காணவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் மதகுருமார்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுநல விரும்பிகளுக்கு அதிகம்  உண்டு.

எருக்கலம்பிட்டி ஒரு பாரம்பரிய கிராமம். இங்குள்ள எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் பலபிரதேசங்களிலுமிருந்தும் வந்து கல்வி கற்றவர்கள் இன்று உயர்நிலையில் இருக்கின்றார்கள். அதேபோன்று 115 வருடம் பழமைவாய்ந்த இந்த மகளிர் கல்லூரியானது, வரலாற்று புகழ்மிக்கது. இங்கு கற்றவர்கள் பல்வேறு உயர்பதவிகளில் நாடாளாவியரீதியில் அமர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம். ‘ஒரு கிராமத்தின் அபிவிருத்திக்கு அந்த கிராமத்தின் கல்விவளர்ச்சியே எடுத்துக்காட்டாக அமைகின்றது’ என்ற உண்மையை நாம் மனதில் இருத்தி எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்போம்” என்றார்.

இந்நிகழ்வில் விஞ்ஞானி கலாநிதி நிஜாமுதீன், வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி, காட்டுபாவா ஜும்ஆ பள்ளித்தலைவர் அஸீம், ஓய்வுபெற்ற அதிபர் அலாவுதீன், எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் முக்கியஸ்தர்களான தஸ்லிம், அன்பாஸ், அன்வர், முபீன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான அலிகான் ஷரீப், றிப்கான் பதியுதீன் அடம்பன் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரிஸ்வானா, மன்னார், மாந்தை மேற்கு, முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்