இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையில் மரணதண்டனை அமுல் செய்யப்படக் கூடாது என்று, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் இது குறித்து கூறுகையில் ; “மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக மரணதண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;
“எவரும் தாங்கள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவோம் என அச்சப்படும் நிலை காணப்படக்கூடாது. மரணதண்டனை கைதிகளுக்கு கிடைத்துள்ள தற்காலிக ஆறுதல் நிரந்தரமானதாக மாறவேண்டும்.
மரணதண்டனைகளை மாற்றி, தண்டனை குறைப்பை மேற்கொள்ளவேண்டும்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் காணப்பட்ட பரந்துபட்ட எதிர்ப்பின் பின்னணியிலேயே நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் நீதிமன்றங்களிலும் ஊடகங்களிலும் வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான எதிர்ப்பு காணப்பட்டது. சர்வதேச அளவிலும் எதிர்ப்பு காணப்பட்டது.
இந்த குரல்களை செவிமடுப்பதும் மனித உரிமைகளை மதிப்பதும் மரணதண்டனை நிறைவேற்றம் தொடர்பான இலங்கையின் தசாப்தகால நிலைப்பாட்டினை தொடர்வதும், மரணதண்டனையை முற்றாக இல்லாமல் செய்வதுமே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையும்” என்றார்.