பிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்
இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அனந்தி சசிதரனின் கோரிக்கை தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
“காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக 20 அல்லது 50 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘மாதாந்தம் 06 ஆயிரம் ரூபா’ எனும் உதவித் தொகையானது பிச்சைக் காசு போன்றதாகும்.
வடக்கு மாகாணத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, இவர்களுக்கு 06 மாதங்களுக்கு வழங்கவே போதுமானதல்ல” என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
“நாட்டில் ஜே.வி.பி.யின் பிரச்சினை நடைபெற்ற காலத்தில், அப்போதைய அரசாங்கம் கடத்திக் காணாமல் செய்யப்பட்டோரும், காணாமல் போனோர் பட்டியலுக்குள் அடங்கப் போகின்றனர். மேலும், ராணுவத்திலிருந்த ஒரு தொகையானோரும் காணாமல் போனோர் பட்டியலுக்குள் சேர்க்கப்படுவர்”
“ராணுவத்தினரின் ஆணையிரவு மற்றும் முல்லைத்தீவு ராணுவ முகாம்கள், விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியானார்கள். அவ்வாறு பலியானவர்களின் சடலங்களை, இலங்கை அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளிக்க முயற்சித்த போது, அவற்றில் சிதைந்து போன சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு, அரசாங்கம் மறுத்தது.
இதனையடுத்து ராணுவத்தினரின் உடல்களை எரிப்பதற்கான அனுமதியை அப்போதைய அரச அதிபர் பெற்றுக்கொண்டமைக்கு அமைய, அவை எரியூட்டப்பட்டன.
இவ்வாறு யுத்தத்தில் பலியாகி பொறுப்பேற்கப்படாத சடலங்களுக்குரிய ராணுவத்தினரின் பெயர்களும், காணாமல் போனோர் பட்டியலுக்குள்தான் உள்ளடங்கப் போகின்றது”.
நாட்டில் வாழ்க்கைச் செலவு உச்சத்தில் உள்ள நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ள மாதாந்த உதவு தொகையான 06 ஆயிரம் ரூபாவானது அற்பமானதாகும்.
காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. ஆனால், காணாமல்போ ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவுவதாக சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொள்வதற்காகவே, 06 ஆயிரம் ரூபா எனும் சிறுதொகையை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது”.
“ஆனால், இந்தப் ‘பிச்சைக் காசு’ எமக்குத் தேவையில்லை. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் வரை, அவ்வாறானாவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்டஈடாக, ஆகக் குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றும் அவர் கூறினார்.
கேள்வி: உங்கள் கணவரின் பெயரில் இந்த உதவு தொகையினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?
பதில்: இல்லை, ஒருபோதும் பெற்றுக் கொள்ள மாட்டேன். எனது கணவர் காணாமல் போகவில்லை. எனது கணவரை – சரணடையும் பொருட்டு ராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன். அவருடன் எனது மூன்று பிள்ளைகளையும் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனவே, எனது கணவரை ‘காணாமல் போனவர்’ என யாரும் கூற முடியாது.
இலங்கை அரசு மட்டுமன்றி, யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், எனது கணவர் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை, சரணடைந்தவர்கள் தம்மிடம் இருக்கின்றனர் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பின்னர் எப்படி எனது கணவர் இல்லாமல் போக முடியும்?
அப்படி இல்லாமல் போயிருந்தால், அவ்வாறு இல்லாமல் போகச் செய்தவர்கள் யார்? அதற்கு எவர் கட்டளையிட்டார் என்பது பற்றிய விபரங்களை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும்.
கேள்வி: உங்கள் கணவர் உயிருடன் இருக்கின்றார் என்று நம்புகிறீர்களா?
பதில்: “அந்த நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றோம். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய தேவை கிடையாது”.
“யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் மாடிக்கு எழிலன் கொண்டு செல்லப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ளன. பத்திரிகையிலும், அது தொடர்பில் அப்போது செய்தி வெளியாகி இருந்தது” என்றார் அனந்தி சசிதரன்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், “கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள், இப்போது கோட்டாபய ராஜபக்ஷ வசம் போய்விட்டன” என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.
விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்தமநாதன் கூட – புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோட்டாபயவிடம் கையளித்துள்ளார் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
பிபிசி