தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

🕔 March 12, 2019

– மரைக்கார் –

சுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.

பொன்விழா ஆரம்பித்த போதே, அநேகமான அதிதிகள் மேடைக்கு வந்து விட்டனர். அதாஉல்லா சற்று தாமதித்தே வந்தார்.

அதாஉல்லா மேடையேறும் போது, மேடையில் அமர்ந்திருந்தவர்களில் தவம் மற்றும் ரஊப் ஹக்கீம் தவிர மற்றைய எல்லோரும் எழுந்து அதாஉல்லாவை கைகொடுத்து வரவேற்றனர்.

ஹக்கீம் எழுந்திருக்காத போதும், அதாஉல்லாவுடன் சிரித்து – கைலாகு கொடுத்தார்.

ஆனால், கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் தவம் – எழுந்திருக்கவுமில்லை, கைலாகு கொடுக்கவுமில்லை.

அதாஉல்லாவின் கட்சியிலிருந்து விலகி, முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டவர் தவம். அதனால், அதாஉல்லாவுடன் அரசியல் பகைமை கொண்டுள்ளார். இருந்த போதும், அதாஉல்லா மேடைக்கு வந்த போது, சபை நாகரீகம் கருதியேனும் தவம் எழுந்திருக்கவில்லை. தவத்தின் இந்த செயற்பாடு குறித்து, பார்வையாளர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டமையினை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – முஸ்லிம் காங்கிரஸ்காரர் என்ற போதும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவிடம் மேடையில் பல தடவை மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

இதனையும் அவதானித்த பார்வையாளர்கள் நசீரின் நல்ல குணம் பற்றிப் பேசிக் கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவும், தவமும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள். அதாஉல்லாவின் கட்சியில் தவம் இருந்த போது, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தவத்துக்கு வழங்கியவர் அதாஉல்லா. இத்தனைக்கும் அப்பால் அதாஉல்லா – ஓர் முன்னாள் ஆசிரியர்; தவத்துக்கு மூத்தவர்.

இவற்றுக்காகவேனும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மேடையேறியபோது, தவம் எழுந்து நின்றிருக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் பேசிக் கொண்டனர்.

ஆனாலும், ‘தன்னமதிப்பு’ அதிகம் உள்ளோருக்கு இதுவெல்லாம் தலையில் ஏறாது என்பதுதான் யதார்த்தமாகும்.

Comments