முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்
🕔 May 29, 2015
– அஸ்ரப் ஏ. சமத் –
மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும் கண்டன அமைதிப் பேரணியில் – தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டுமென
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கான அஞ்சலி நிகழ்வு – நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மனோ கணேசன் மேற்கண்ட வேண்டுகோளினை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
வித்தியாவின் படுகொலையை தமிழ், சிங்கள மற்றும்முஸ்லிம் மக்கள் இணைந்து கண்டித்து, அதற்கெதிராக அமைதிப் பேரணிகளை நடத்தியமையினைப் போன்று, முஸ்லிம்கள் மியன்மாரில் அநியாயமாகக் கொலைசெய்யப்படுவதற்கு எதிராக, கொழும்பு வாழ் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பில் நடத்தும் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டும். அதுவே – முஸ்லிம்களுக்கு நாம் செய்யும் உதவியாகும்.
மேலும், வித்தியாவுக்கு நடந்தமை போன்று, சிங்களப் பெண்ணொருவருக்கு நடந்தால், சிங்கள மக்களுடன் இணைந்து தமிழர்களாகிய நமது எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைதல் வேண்டும். இதுவே மானிட பண்பாகும். கடந்த காலங்களில், இவ்வாறான கண்டனங்களில் கலந்து கொள்ளாமால் நாம் பயந்து ஒதுங்கியிருந்தோம். இனி ஒருபோதும் அவ்வாறு நாம் இருக்கக் கூடாது.
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏதும் அநீதிகள் நடைபெறும் போது, தமிழர்களாகிய நாம் – அதனை தள்ளி நின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருக்கக் கூடாது. அல்லது, அது – நமக்கு தேவையில்லாத விடயம் என்று நினைக்கக் கூடாது. அல்லது, பாதிக்கப்பட்டவர் நமது இனம் இலலையே என்று சிந்திக்க கூடாது.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் – இந்த நாட்டிலும் சர்வதேசத்தில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.
இந் நிகழ்வில், வித்தியாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மனித உரிமை காப்பாளர் நளினி ரட்ணராஜா, சிறிதுங்க ஜயசசூரிய, மேல் மாகாணசபை உறுப்பிணர் சன் குகவரதன், ரோயல் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரசிரியர் சி. பத்தமநாதன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் வேலனை வேனியன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.