ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம்
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
துபாயில் சட்டம் கடுமையானது என்பதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதுஷின் சகாக்கள்- ஏன் மதுஷ் கூட புதிய தகவல்களை கக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் பல முக்கியமான வர்த்தகர்கள் இந்த அணியினர் பலருடன் தொடர்புகளை வைத்திருந்தமை அறியப்பட்டுள்ளது.
அதேபோல கலைத்துறையை சேர்ந்த பலர் மதுஸுடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது. அப்படியான வர்த்தகர்களின் – கலைஞர்களின் சொத்துக்களின் விபரங்களும் கிடைத்துள்ளதால் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகிறது பொலிஸ்.
நாட்டுக்கு வந்து போனார்
மதுஷ் துபாய் சென்ற பின்னர் கைது செய்யப்படும் வரையான காலப்பகுதிக்குள் மூன்று தடவை இலங்கை வந்து சென்றுள்ளார்.
அந்த மூன்று தடவைகளும் மிரிஸ்ஸவுக்கு விசேட ட்ரோலர் படகு ஒன்றில் வந்த அவர், துபாயில் கைது செய்யப்பட்டு இப்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள சன்சைன் சுத்தாவின் மிரிஸ்ஸ வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
இரண்டு தடவை அவர் நடிகர் ரயனின் காரை பயன்படுத்தி, தனிப்பட்ட பயணங்களை சென்றுள்ளாரெனவும் அந்த பயணங்கள் சில ‘சம்பவங்களுக்கானது’ என்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மதுஷ் இலங்கை வந்து செல்வது முக்கிய அரசியல் மற்றும் பொலிஸ் புள்ளிகளுக்கு தெரிந்திருந்ததா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடக்கின்றன.
சிவா – தலைமைறைவு
அதேசமயம் மதுஷ் – துபாயில் இருந்து இந்தியா வந்து அங்கிருந்து இலங்கை வர பயன்படுத்திய ட்ரோலர் படகை வழங்கிய கொச்சிக்கடை சிவாவை பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாகியிருப்பதால் நவீன தொழிநுட்ப வசதிகளின் உதவியுடன் அவரை தேடும் பணி நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுஷின் முதலீட்டில் செய்யப்படும் வியாபாரங்கள் மற்றும் அவரின் சொத்துக்களை கையாளும் முக்கியஸ்தர்கள் குறித்தும் தனியே தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீருடை வழங்கிய சிப்பாய்
அதேசமயம் மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சொல்லப்படும் வவுனியா ராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் லான்ஸ்கோப்ரல் கசுன் குறித்து பொலிஸும் ராணுவமும் தனித்தனி விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
ஆயுதங்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் சீருடைகளை, மதுஸுக்கு அவர் வழங்கியது விசேட பிரமுகர்களை இலக்கு வைத்து அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தவா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
துபாயில் சட்டத்தரணி ஷாப்திக்க
துபாயில் பாடகர் அமல் மற்றும் மகன் நதிமலுக்காக ஆஜராக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி ஷாப்திக்க வெல்லப்பிலி, இன்று அங்கு பொலிஸ் தலைமை அதிகாரியுடன் பேச்சு நடத்தி பின்னர் அமல் மற்றும் நதிமலை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.
இரண்டாவது மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென்பதால், அங்கு துபாய் சட்டத்தரணிகளுடன் ஷாப்திக்க பேசிவருகிறார்.
அதேவேளை இந்த கைது விவகாரத்தில் தலையிட துபாயிலுள்ள இலங்கை கொன்சியூலேட் மறுத்துள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விடயத்தில் தலையிட முடியாதென்பதால் இவ்வாறு மறுக்கப்பட்டுள்ளது.
மதுஷை பார்வையிட அனுமதி
அதேவேளை மதுஷின் சட்டத்தரணிகள் அவரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 20 நிமிடங்கள் மட்டும்.
மதுஷின் பெயரில் கப்பம் பெற்ற பலர் இப்போது தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியை ஆரம்பித்துள்ளது விசேட அதிரடிப்படை.
அதேபோல் மதுஷின் உதவியுடன் நாட்டின் பல இடங்களில் காணிகளை ஆக்கிரமித்தவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுஷ் விவகாரத்தில் இன்னுமொரு அதிர்ச்சி செய்தி விரைவில் வெளிவருமென பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் சொல்கின்றன.
அது என்ன? கொஞ்சம் பொறுத்திருங்கள்.
மதுஷ் தொடர்பான முன்னைய செய்தி: டிஐஜி நாலக சில்வாவுடன் மதுஷ் தொடர்பு; ஜனாதிபதி கொலைச் சதியுடன் சம்பந்தமா: அதிர வைக்கும் தகவல்கள் அம்பலம்