அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து
🕔 September 20, 2015
– க. கிஷாந்தன் –
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பகுதியில், தனியார் பஸ் ஒன்று – பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டயகம தலவாக்கலை பிரதான வீதியில், அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும் போது, மேற்படி பஸ் அக்கரப்பத்தனை ஆகுரோவா பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
ஆயினும், பஸ்ஸினுள் பயணிகள் எவரும் இருக்கவில்லை. திருத்த வேலைகளுக்காகச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டபோதே, இவ்விபத்து இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சாரதியும், நடத்துனரும் பஸ்ஸிலிருந்து வெளியில் பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.