அஷ்ரப் ஓர் ஆளுமை

🕔 September 16, 2018

– சுஐப் எம். காசிம் –

(எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தினம் இன்றாகும்)

செப்ரெம்பர் பதினாறென்னும் தேதியும் வரும் போதெல்லாம்
சித்தமும் கலங்கு தம்மா சிந்தனை குழம்பு தம்மா
உத்தமர் அஷ்ரப் அன்று உயிர் நீத்த சோக நாளாம்
எத்தனை ஆண்டானாலும் அவர் நினைவகலா தம்மா.

சிறீலங்கா பெற்றெடுத்த தியாகத்தின் சின்னமானார்
சீரிய புத்திக் கூர்மை ஆளுமை அவர்க்கே சொந்தம்
சமூகத்தின் மீது கொண்ட சளைக்காத பற்றினாலே
இமைப் பொழுதேனும் சோரா இன்பணி செய்தாரன்றே.

காங்கிரஸ் என்னும் முஸ்லிம் கட்சியைத் தோற்றுவித்த
பாங்குடன் மக்கள் தம்மைப் பரிவுடன் ஒன்று சேர்த்தார்
தீங்கு செய்தோரை எல்லாம் திறனாக வெற்றி கொண்டார்
வேங்கையாய் விளங்கி முஸ்லிம் விடிவுக்கு வழி வகுத்தார்.

அரசுடன் இணைந்து முஸ்லிம் நலன்களைப் பேணி நின்றார்
அன்போடு பண்பினாலே மக்களைக் கவர்ந்து நின்றார்
அஷ்ரப் தான் உண்மையான தலைவர் என்றெண்ணி நின்றோம்
அரக்கரின் தீமையாலே எமை விட்டு பிரிந்தார் அம்மா.

வடபுல முஸ்லிம் மக்கள் வாழ்விழந் தலைந்த போது
திடமுடன் எங்கள் துன்பம் தீர்த்திட உதவி நின்றார்
வீட்டுக்காம் காணி தந்தார் நிலவிய வறுமை போக்க
உலர் உணவளித்தார் கல்வி மேம்பாட்டுக் குதவி நின்றார்.

நேர்மையில் சிறந்து நின்றார் நேசத்தோடு அரவணைத்தார்
பாரினில் அவரைப் போன்ற பண்பாளர் இல்லையம்மா
சோர் விலாச் சேவை செய்த சுதந்திர வீரருக்கு
நேசனாம் இறையின் ஆசி கிடைத்திட வேண்டி நிற்போம்.

(மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்போடு இந்தக் கவிதையை எழுதிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம், தொழில் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் மரியாதைக்குரிய உறவினைக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்