நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், மாட்டிறைச்சிக் கடைக்குத் தடை

🕔 September 11, 2018
– பாறுக் ஷிஹான்-

ல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று, அப்பிரதேச சபை இன்று திங்கட்கிழமை ஏகமனதான தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு. மதுசுதன் கொண்டு வந்த பிரேரணைக்கு அமைவாக, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசு வதையினைத் தடுப்பதற்கும் சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் இதனை அமுல்படுத்த வேண்டுமென அவர் கோரினார்.

நல்லூர் பிரதேச சபையின்  அமர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு – பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

“சபை  எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவது தடை செய்யப்பட  வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் இனி குத்தகைக்கு விடப்படாது தடுக்கப்பட வேண்டும்” எனவும், தனது பிரேரணையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைவாக மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபை இன்றைய அமர்வில்   ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது இச்சபையின் எல்லை பகுதிக்குள்  03 மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments