அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

🕔 September 3, 2018

– முன்ஸிப் அஹமட் –

தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தனக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இதனால் மன வேதனையடைந்த நிலையில், கட்சியை விட்டு விலகுவதற்கு தான் யோசித்ததாகவும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் பகிரங்க கூட்டமொன்று அக்கரைப்பற்றில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

அந்தக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்ட மேற்படி கூட்டத்திலேயே, இந்த விடயத்தை உதுமாலெப்பை கூறினார்.

தனக்கு எதிராக கட்சியிலுள்ளவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுவார்களாயின்,  வருத்தப்பட வேண்டிய முடிவை – தான் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

பின்னணி

தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவுக்கும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவு உள்ளதாகவும், தேசிய காங்கிரசை விட்டு உதுமாலெப்பை விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையக் கூடிய சாத்தியம் உள்ளது என்றும், ‘புதிது’ செய்தித்தளம் அண்மையில் வெளியிட்ட செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியானது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலரங்களில் பாரிய அதிர்வினையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தன.

குறித்த செய்தி வெளியானதிலிருந்து அரசியல் கட்சிகளின் பல முக்கியஸ்தர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துடன் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவுக்கும் இந்தச் செய்தி, கடுமையான சங்கடங்களை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.

உதுமாலெப்பை பிடிவாதம்

இந்த நிலையில், குறித்த செய்திக்கான மறுப்புச் செய்தியொன்றினை வழங்குமாறு, தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் உதுமாலெப்பையை வற்புறுத்தியதாகவும், ஆனால் அதற்கு உதுமாலெப்பை சம்மதிக்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், அதாஉல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவுகள் எவையும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக, மேற்படி பகிரங்கக் கூட்டம் நடத்தப்பட்டதோடு, அதில் உதுமாலெப்பையும் பேச வைக்கப்பட்டார்.

ஆனால், தேசிய காங்கிரஸ் தலைமைத்துவம் எதிர்பார்த்தமைக்கு மாறாக, மேற்படி கூட்டத்தில் உதுமாலெப்பை தனது உள்ளக் கிடக்கையினைக் கொட்டித் தீர்த்ததோடு, தேசிய காங்கிரசிலிருந்து தான் விலகுவதற்கு யோசித்ததாகவும் கூறி, தேசிய காங்கிரஸ் தலைமையின் எதிர்பார்ப்பை தலைகீழாக மாற்றி விட்டிருந்தார்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை என்பது இதைத்தான்.

உரையின் முக்கிய பகுதிகளைக் கொண்ட ஒலி வடிவம்: 

தொடர்புபட்ட செய்தியை பார்ப்பதற்கு: அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்