ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

🕔 September 3, 2018

– அஹமட் –

டகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மாந்தை மேற்கு பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார்.

யார் இந்த முஷர்ரப்

தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் ஊடகவியலாளராகக் கடமையாற்றும் முஷர்ரப்பின் சொந்த ஊர் பொத்துவிலாகும்.

2005ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நேத்ரா தொலைக்காட்சியில் இணைந்து கொண்டதன் மூலம், இவர் ஊடகத்துறைக்குள் நுழைந்தார்.

பின்னர் வசந்தம் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் முதன்முதலாக இணைந்து, அத் தொலைக்காட்சி சேவையின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களில் முஷ்ர்ரப்பும் ஒருவராவார்.

ஹக்கீமின் பழிவாங்கல்

வசந்தம் தொலைக்காட்சியில் ‘சுயாதீன செய்திப் பார்வை’ மற்றும் ‘அதிர்வு’ உள்ளிட்ட பல பிரபலமான நிகழ்ச்சிகளை முஷர்ரப் நடத்தினார்.

இந்த நிலையில், முஷர்ரப்புக்கு எதிராக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – வசந்தம் தொலைக்காட்சி சேவை நிருவாகத்துக்கு எழுத்து மூலமாக முறைப்பாடொன்றினை வழங்கியதோடு, ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப்பை நீக்குமாறும் ஹக்கீம் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹக்கீமுக்கு எதிரான தரப்பினருக்கு – தான் நடத்தும் நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பம் வழங்கியதாகவும், அது ஹக்கீமுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனாலேயே தனக்கு எதிராக, பழிவாங்கும் நடவடிக்கைகளை ஹக்கீம் மேற்கொண்டதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் முஷர்ரப் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் – தான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் நியாயமான முறையில் சந்தர்ப்பங்களைத் – தான் வழங்கியிருந்ததாகவும் முஷர்ரப் சுட்டிக்காட்டினார்.

சமூகப் பணி 

ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முஷர்ரப் ஈடுபாடு கொண்டவராவார். அவரின் சொந்த ஊரான பொத்துவில் பிரதேசம் – அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய ஒரு பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால், தமது ஊருக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக பொத்துவிலிலுள்ள படித்த மக்கள் மற்றும் சமூக அக்கறையாளர்களுடன் முஷர்ரப் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு வருவதோடு, தன்னுடைய ஊடகத்துறைப் பிரபலத்தைப் பயன்படுத்தி, தனது ஊருக்கான சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் முஷர்ரப் பாடுபட்டுள்ளார்.

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் கல்வியினை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலும், அதற்கான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் முஷர்ரப் பெரும் பங்காற்றியுள்ளார்.

இணைவின் நோக்கம்

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முஷர்ரப் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் தனது அரசியல் பிரவேசம் பற்றியும், அதன் நோக்கம் குறித்தும் முஷர்ரப் பதிலளித்துள்ளார்.

பொத்துவில் பிரதேசத்துக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்வதற்கு, ஆளும் தரப்பிலுள்ள கட்சியொன்றுடன் இணைய வேண்டிய தேவை உள்ளதாக முஷர்ரப் கூறுகின்றார்.

“மிக நெடுங்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு – பொத்துவில் மக்கள் ஆதரவு வழங்கி வந்த போதும், எமது பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதுவித நன்மைகளையும் செய்யவில்லை. ஆனால், மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தானாக முன்வந்து பொத்துவிலுக்கு உதவுகின்றார்.

மேலும், ஊடகத்துறையில் நான் நேர்மையாகச் செயற்பட்ட நிலையிலும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்குப் பிடிக்காதவர்களுகளின் கருத்துக்களை ஊடகத்தில் சொல்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கினேன் என்பதற்காக, அவர் என்னைப் பழிவாங்கி வருகிறார்.

எனவே, என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள ஓர் முஸ்லிம் அமைச்சர் என்னை தொடர்ச்சியாகப் பழி வாங்கும் போது, என்னைத் தற்காத்துக் கொள்வதற்கான தார்மீக உரிமை எனக்குள்ளது. அதை உரிய வகையில் கையாண்டிருக்கிறேன்” என்று, ‘புதிது’ செய்தித்தளத்திடம் முஷர்ரப் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், ஊடகத்துறையிலும் தான் தொடர்ந்தும் செயற்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments