ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த மரணம்
ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த இன்று திங்கட்கிழமை காலை காலமானார் என்று, ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பூரண ராணுவ மரியாதையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை மாலை இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்கும் போது இவருக்கு 77 வயதாகும்.
1961ஆம் ஆண்டு ராணுவத்தின் கடற் பிரிவில் இணைந்த இவர், 1998ஆம் ஆண்டுவரையில் 37 ஆண்டுகள் ராணுவ சேவையில் கடமையாற்றினார்.
அம்பலாங்கொட பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை, இவர் கடமையாற்யிருந்தார்.
பின்னர் ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவராகவும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இவர் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.