நனைத்து விட்டு சுமத்தல்

🕔 August 6, 2018

– மப்றூக் –

மூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட நேரிடும்.

மக்கள் ஆணையினைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம் செல்லுகின்ற அநேகமான அரசியல் கட்சிகள், அதன் பிறகு – மக்களின் மனவோட்டம் பற்றி, நினைத்துப் பார்ப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன. தமக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்கள், என்ன நினைக்கின்றார்கள் என்பதனை, அநேகமான தருணங்களில் எண்ணிப் பார்ப்பதற்கு அரசியல் கட்சிகள் தவறிவிடுகின்றன என்கிற புகார்களில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன.

அரசியல் கட்சிகளின் இவ்வாறான அலட்சியச் செயற்பாடுகள் காரணமாக, முக்கியமான விவகாரங்களில், இந்தக் கட்சிகள் ‘பொறி’யில் சிக்கித் தவிக்கும் நிலைவரங்கள் உருவாகி விடுவதுமுண்டு.

முரண்

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு தெரிவித்த முஸ்லிம் அரசியல் கட்சிகள், இப்போது ‘புதிய முறைமை வேண்டாம்’ என்று அழுது புலம்பித் திரிகின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் புதிய முறையில் நடந்தால், தங்கள் கட்சியும் சமூகமும் அதிகளவு பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டியேற்படும் என, முஸ்லிம் கட்சித் தலைமைகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. அதனால், மீண்டும் பழைய தேர்தல் முறைமையினைக் கொண்டு வருவதற்கான ஆதரவினை வழங்குமாறு, ஏனைய சமூகங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடம் முஸ்லிம் கட்சித் தலைமைகள் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றன.

இதனைத்தான் ‘நனைத்து விட்டுச் சுமத்தல்’ என்பர். இந்த நிலைவரத்துக்கான பழியை யாரின் தலையிலும் மேற்படி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களால் சுமத்திவிட முடியாது என்பதுதான் இங்குள்ள ‘அனுதாபத்துக்குரிய’ பகிடியாகும். அந்த தலைவர்களின் பாசையிலேயே சொன்னால்; ‘இந்த நிலைவரத்துக்கு நீதான் காரணம்’ என்று கூறி, யாரின் தலையிலும் இவர்களால் ‘தேங்காய் உடைக்க’ முடியாது.

மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் சட்டமூலத்துக்கு ஆதரவாக, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் நாடாளுமன்றினுள் கைகளை உயர்த்தியிருந்தமை பற்றி நாம் அறிவோம். பிறகு, இரண்டு கட்சிகளும் வெளியில் வந்து, ‘தவறு நடந்து விட்டது’ என்றும், ‘அவர்கள் ஆதவளித்தமையினால்தான் நாங்களும் ஆதரவளிக்க நேர்ந்தது’ என்று, சிறுபிள்ளைத்தனமாக ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி, விரல் நீட்டியிருந்தமை குறித்தும் நமக்குத் தெரியும்.

நிராகரிப்பு

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் சட்டத்தினை தாம் நிராகரிப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரசின் 28ஆவது பேராளர் மாநாடு, கண்டி – பொல்கொல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது, 09 விடயங்களை – பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களாக அந்தக் கட்சி அறிவித்தது. அவற்றில் இரண்டாவது தீர்மானமாக, ‘புதிய மாகாண சபைகள் தேர்தல் முறையை நிராகரிக்கிறோம்’ என, முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

‘புதிதாக உருவாக்கப்பட்டு, சட்டமாக்குவதற்கு தயார் நிலையிலுள்ள மாகாண சபைகள் முறைமையும் அதற்கான தொகுதிகள் நிர்ணயமும், சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும் அவர்களின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்கும் விடயமாகவும் அமைந்துள்ளன. எனவே, புதிய மாகாண சபைகள் தேர்தல் முறையை இந்தப் பேராளர் மாநாடு முற்றாக நிராகரிக்கிறது’ என, அந்த தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் விபரித்துள்ளது.

மேலும், பதவிக் காலம் முடிவடைந்து இன்னும் தேர்தல்கள் நடத்தப்படாமலுள்ள மாகாண சபைகளுக்கு, தேர்தல்களை பழைய விகிதாசார முறையில் நடத்துமாறும், இந்தப் பேராளர் மாநாடு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பிள்ளையில்லாமல் பெயர் வைத்தல்

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காகத்தான், தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் வேலைத் திட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் குற்றம் கூறி வருகின்றனர். அதில் உண்மைகள் இல்லாமலுமில்லை.

மாகாண சபைகளுக்கு புதிய முறையில் தேர்தல்களை நடத்துவதற்குரிய சட்டமூலமொன்றினை நாடாளுமன்றத்துக்கு அரசாங்கம் கொண்டுவந்த போது, அதனோடு இணைந்ததாக, மாகாணங்களுக்கான புதிய தொகுதிகள் பற்றிய இறுதி செய்யப்பட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சரியானதும், நியாயமானதுமான நடவடிக்கையாகவும் இருந்திருக்கும். பிள்ளையில்லாமல் பெயர் வைக்க முடியாதல்லவா? ஆனாலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலே, பிள்ளையில்லாமல்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. தொகுதிகளுக்கான எல்லைகள் இறுதி செய்யப்படாத நிலையில்தான், மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் சட்ட மூலத்துக்கு மூன்றிலிரண்டு பங்கு ஆதரவு வழங்கப்பட்டது.

ஆனாலும், ‘பெயர் வைப்பதற்கு முன்னதாக, பிள்ளையைக் காட்டுங்கள்’ என்று, முஸ்லிம் கட்சிகளின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் நாடாளுமன்றத்தில் தட்டிக் கேட்கவில்லை. அல்லது, ‘பிள்ளை பிறந்த பிறகு, பெயர் வைத்துக் கொள்வோம்’ என்று கூறி, தொகுதி எல்லை நிர்ணயத்தின் இறுதி செய்யப்பட்ட அறிக்கையின் அவசியத்தை, நாடாளுமன்றில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும் வலியுறுத்தியிருக்கவுமில்லை.

ஆக, ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற மனநிலையுடன்தான் மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் சட்டமூலத்துக்கு ஆதரவாக, முஸ்லிம் கட்சிகள் கைகளை உயர்தியிருந்தன என்பதை இங்கு பதிவு செய்வதில் எந்தவித தயக்கங்களும் நமக்குக் கிடையாது. இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்புணர்வுகள் இருந்திருக்குமாயின், மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக, அவை – கையுயர்த்தியிருக்க மாட்டாது.

ஆனாலும், புதிய முறைமையிலான மாகாண சபைகள் தேர்தல் சட்டமானது, ஒட்டுமொத்தத்தில் முஸ்லிம் சமூகத்துக்கே பாதகமாக அமைந்து விடும் என்பதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸானது, அதற்கு ஆதரவாக கைகளை உயர்த்திய தமது பிழையினைப் பூசி மெழுகுவதற்கு முற்படுகிறது. இதனை கண்டி பேராளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆற்றிய உரையின் மூலம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

மு.கா. தலைவரின் விளையாட்டு

மு.காங்கிரசின் பேராளர் மாநாட்டில் மு.கா. தலைவர் உரையாற்றுகையில்;

“மாகாண சபைகள் தேர்தல் சட்டத் திருத்தம் என்பது, ஆட்சியிலே இருக்கின்ற இரண்டு கட்சிகளும் எங்களுக்குத் தெரியாமல் இரவோடிரவாக நாடாளுமன்ற சட்ட விதிமுறைகளை மீறி, நிறைவேற்றியதொன்றாகும்.

அதை நிறைவேற்றும் தறுவாயிலே, நாங்கள் பலமான எதிர்ப்புக்களைத் தெரிவித்தோம். அப்போது நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து கொண்டு எங்களிடம் வினயமான வேண்டுகோளை முன்வைத்தது. மேலும், விரைவிலே உங்களுடைய குறைகளுக்குத் தீர்வாக இதற்கான மாற்றங்களுக்கு நாம் உதவுவோம் என்கிற உத்தரவாதங்களும் வழங்கப்பட்டன.

ஆனால், இன்று அவற்றையெல்லாம் உதாசீனம் செய்து பேசுகின்ற ஒரு நிலைமை காணப்படுகிறது. எனவே, இந்த அநியாயத்துக்கு விடைதேடுகின்ற முயற்சியிலே, சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் சேர்ந்து இந்த சதியை முறியடிப்போம்.
சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிதிநிதித்துவங்களை வேண்டுமென்றே குறைப்பதற்காகவும் இல்லாமல் செய்வதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள இவ்வாறான தேர்தல் முறையினை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. எனவே அதனை எதிர்ப்பதற்கு; ‘நீங்கள் உங்கள் பூரண ஆதரவை தரவேண்டும்’ என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமும் நாம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.

இந்த நிலையில், அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

மேற்படி உரையின் மூலம், மாகாண சபைகள் தேர்தல் சட்டத் திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமைக்கான பழியிலிருந்து, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தப்பிக்க முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும், அந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக, மு.கா கையுயர்த்தியமைக்கான பழியினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையில் சுமத்துவதற்கும் தனது உரையின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் நாட்டின் தலைமையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, தற்போது அவற்றினை உதாசீனப்படுத்தி விட்டதாக, மு.கா. தலைவர் தனதுரையில் கூறுயிருந்த அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இந்த விடயத்தில் குற்றப்படுத்தாமல், மிகக் கவனமாகக் காப்பாற்றியுள்ளமையும் கவனத்துக்குரியதாகும்.

பொறுப்பாளி

எது எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஒரு சட்ட முதுமாணியாவார். அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் சட்ட முதுமாணிப் பட்டத்தைக் கொண்டுள்ள, புகழ்பெற்றதொரு சட்டத்தரணியாவார். மட்டுமன்றி, மு.காங்கிரசில் முக்கிய பதவிகளை வகிப்போரில் கணிசமானோர் சட்டத்தரணிகளாக உள்ளனர்.

இவ்வாறான நிலையில், மாகாண சபைகளிலே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் கடுமையான வீழ்ச்சியினை ஏற்படுத்தும் ஒரு சட்டத் திருத்தத்துக்கு, முன்யோசனைகளின்றி மு.காங்கிரஸ் ஆதரவு வழங்கியமைக்கான பழியினை, வேறொருவரின் தலையில் சுமத்துவதற்கு மு.கா. தலைவர் எடுக்கும் எத்தனங்களை, நியாய தர்மத்தின் அடிப்படையில் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இன்னொருபுறம், இவ்வாறான முக்கிய விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி, அதிலுள்ளவர்களின் அபிப்பிராயங்களை அறியும் வழக்கம் மு.காங்கிரசில் இருந்து வந்துள்ளது. மு.காங்கிரஸ் உயர்பீடத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைவாகவே, இவ்வாறான வாக்களிப்புகளில் கலந்து கொண்டு, ஆதரவளிப்பதா இல்லையா என்பதை அந்தக் கட்சி தீர்மானிக்கும்.
ஆனால், கடந்த பல வருடங்களாக கட்சிக்குள் இந்த நடைமுறை இல்லாமல் போய்விட்டது. கட்சித் தலைவரின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே, இவ்வாறான விடயங்களில் முடிவுகள் எட்டப்படுகின்றன.

அந்த வகையில், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பது என்கிற தீர்மானமும் மு.கா. தலைவருடைய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேதான் எடுக்கப்பட்டிருந்தது. மு.கா.வின் உயர்பீடத்தைக் கூட்டி இது தொடர்பில் பேசப்படவில்லை. அப்படியாயின், இந்த விவகாரத்திலுள்ள நல்லவை கெட்டவை அனைத்துக்கும், மு.கா. தலைவர்தான் பொறுப்புக் கூற வேண்டியவராக உள்ளார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளிலிருந்தும், கூறப்படும் பழிகளிலிருந்தும் மு.கா. தலைவர் தப்பிப்பிப்பதற்கு எப்படித்தான் முயற்சித்தாலும்; ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்பதுதான் சூழ்நிலை யதார்த்தமாக இருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்