ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை

🕔 April 16, 2018

– முன்ஸிப் அஹமட் –

லுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியினை பாரியளவில் மண் மூடியுள்மையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒலுவிலில் – மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் என, இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நின்று தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியினை மண் மூடி, படகுகளின் போக்குவரத்துக்குத் தடையினை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற பெரிய படகுகள் தற்போது, வர்த்தகத் துறைமுகப் பகுதியில் தரித்து நிற்கின்றன. ஆயினும், வர்த்தகத் துறைமுகத்தின் முகப்புப் பகுதியினையும் தற்போது மண் மூடியுள்ளமையினால், மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் சுமார் 350 படகுகள் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நிற்பது வழமையாகும். மேலும் மாத்தறை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த படகுகளும் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலினுள் சென்று வரக்கூடிய போக்குவரத்து மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமையினால், இப் பகுதியில் மீன்பிடித் தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் போக்குவரத்துப் பாதை, இவ்வாறு பல தடவை மணலால் மூடப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினைக் காண வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்.

மணல் மூடியுள்ள பகுதியை படகுகள் கடக்கும் பொருட்டு, அவற்றினை மனித வலுவினைப் பயன்படுத்தி இழுக்க வேண்டிய நிலைவரம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேலதிக கூலியாட்களுக்கான செலவுகள் தினமும் தமக்கு ஏற்படுவதாகவும் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மீன்பிடி துறைமுகத்தில் தரித்து வந்த பெரிய படகுகள் தற்போது வர்த்தகத் துறைமுகப் பகுதியில் தரிந்து நிற்கின்ற போதும், படகுகளிலிருந்து மீன்களை கரைக்குக் கொண்டு வருவதிலும் தொழிலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

கப்பல்கள் தரித்து நிற்பதற்கான அமைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறைமுகத்தில், படகள் தரித்து நிற்பதிலும், படகுகளிலிருந்து மீன்களை தரைக்கு இறக்குவதிலும் பாரிய சங்கடங்களை மீனவர்கள் எதிர்நோக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

எனவே, ஒலுவில் துறைமுகப் பகுதியை மூடியுள்ள மணலை அகற்றுவதோடு, எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்படாத வகையில், நிரந்தரத் தீர்வொன்றினை தமக்குப் பெற்றுத் தருமாறு, இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்