உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல்

🕔 March 15, 2018

தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் 326  சபைகள், எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து இயங்கும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

குறித்த சபைகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு, ஆட்சியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்  எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் 15 உள்ளூராட்சி சபைகளை தவிர, ஏனையவற்றின் பிரதிநிதிகள் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் 24 மாநகர சபைளும் 41 நகர சபைகளும் அடங்குகின்றன.

முழு உள்ளூராட்சி சபைகளுக்கும் கடந்த தேர்தலில் 05 ஆயிரத்து 61 உறுப்பினர்கள் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டனர். அதேவைள, 03 ஆயிரத்து 264 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் 60 வீதமான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 40 வீதமான உறுப்பினர்கள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Comments