முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர்

🕔 February 26, 2018

வா முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, முழங்காலில் வைத்ததாகக் கூறப்படும் பெண் அதிபரிடம் 500 மில்லியன் ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த பெண் அதிபர் பணியாற்றும் பாடசாலையில் மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, சம்பந்தப்பட்ட அதிபருக்கு  முதலமைச்சர் கடிதமொன்றினை அனுப்பி வைத்த போதிலும், அந்தக் கடிதத்தின் பிரகாரம் அதிபர் நடந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனது இடத்துக்கு மேற்படி அதிபரை அழைத்த முதலமைச்சர், அவரை முழங்காலிடச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில், தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே, விசாரணைகள் முடிவுறாத நிலையில், குறித்த அதிபரிடம் மான நஷ்டஈடு கோரி, முதலமைச்சர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து மனித உரிமைகள் நிலையம் தெரிவிக்கையில்; விசாரணையின் இடையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம், சாட்சிகளை அழுத்தங்களுக்கு உள்ளாக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, மனித உரிமைகள் நிலையம் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்